ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை ஆஸி. வென்றது. தொடர்ந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. இந்த சூழலில் அதற்கடுத்த 3 போட்டிகளையும் தென்னாப்பிரிக்கா வென்று தொடரையும் வென்றுள்ளது. உலகக் கோப்பை தொடர் அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த வெற்றி ஊக்கம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏனெனில் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது. இருப்பினும் அதற்கடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. மூன்று போட்டிகளிலும் முறையே 100+ ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்தி வெற்றியாகும். டிகாக், கேப்டன் பவுமா, மார்க்ரம், கிளாசன், டேவிட் மில்லர் என தென்னாப்பிரிக்க வீரர்கள் பேட்டிங்கில் மிரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்ரம், தொடர் நாயகன் விருதை வென்றார். ஆஸ்திரேலிய அணி வரும் வெள்ளிக்கிழமை (செப். 22) தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வருகிறது. மொகாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட்டில் இந்த தொடர் நடைபெற உள்ளது. தொடர்ந்து இரண்டு அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. அக்டோபர் 8-ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுக்கும் இதுதான் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி.