
புனே: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் 177 ரன்கள் குவித்தார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. கேப்டன் நஜுமுல் 45 ரன்களையும், தௌஹித் ரிடோய் 74 ரன்களையும் எடுத்து அணிக்கு உதவினர். இவர்கள் தவிர தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் தலா 36 ரன்களும், மஹ்முதுல்லாஹ் 32 ரன்களும் எடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சார்பில், ஆடம் ஜாம்பா மற்றும் சீன் அபாட் தலா 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
307 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் ஆட்டமிழந்தாலும் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். வார்னர் நிதானம் காட்ட மார்ஷ் வெளுத்து வாங்கினர். வார்னர் 53 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் ஸ்டீவன் ஸ்மித் மார்ஷ் இணைந்து சிறப்பாக ஆடினர். மிட்செல் மார்ஷ் தனது அதிரடியை தொடர்ந்து சதம் அடித்தார். இக்கூட்டணியை வங்கதேச வீரர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா விரைவாக வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தது. இறுதியில் 44.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 307 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 177 ரன்களை குவித்தார். ஸ்மித் 63 ரன்கள் எடுத்தார்.