கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. சுமார் 6.15 மணி அளவில் மழை நின்ற நிலையில் மிட்விக்கெட் திசையில் அதிக அளவில் ஈரப்பதம் காணப்பட்டது. இதை உலர்த்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆடுகளத்தை நடுவர்கள் பார்வையிட்டனர். அப்போது மைதானத்தில் ஈரம் முழுமையாக உலர்த்தப்படாமல் இருந்தது. இதையடுத்து மின்விசிறிகள் கொண்டு ஈரத்தை உலர்த்தும் பணி நடைபெற்றது.
8.30 மணிக்கு மீண்டும் ஆடுகளத்தை பார்வையிடுவதாக நடுவர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த நேரத்தில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்று போட்டி தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஆனால், இன்று காலையில் இருந்து கொழும்புவில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. காலை 7 மணி முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வானமும் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். சூப்பர் 4 சுற்றை பொறுத்தவரை தகுதிபெற்ற நான்கு அணிகளும் தங்களுக்குள் ஒரு முறை மோதும். தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 2 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. நெட் ரன் ரெட் அடிப்படையில் பாகிஸ்தான் +1.051 புள்ளிகளும், இலங்கை +0.420 புள்ளிகளும் பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டால் 3 புள்ளிகளுடன் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வங்கதேசம் அணி இரண்டு தோல்விகளை பெற்று இறுதிப்போட்டி ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது.
அதேநேரம், இந்திய அணியை பொறுத்தவரை சூப்பர் 4 சுற்றில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பாகிஸ்தான் உடனான போட்டியே முதல் ஆட்டம். மழையால் இன்றைய ஆட்டம் ரத்தாகி ஒரு புள்ளியை இந்தியா பெறும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெறத் தவறினால்கூட, இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறும். இலங்கை அணி ஏற்கனவே ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது.சூப்பர் 4-ல் இந்தியா இன்னும் இலங்கை மற்றும் வங்காளதேசத்துக்கு எதிராக விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.