
லாகூர்: இந்தியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டியில் நூறு சதவீத செயல்திறனை தங்கள் அணி வெளிப்படுத்தும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்திய பிறகு அவர் இதனை சொல்லியிருந்தார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. முதல் சுற்றில் இருந்து இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின.
நேற்று சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் விளையாடின. லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை 39.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு எட்டியது பாகிஸ்தான். 6 ஓவர்கள் வீசி, 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றிய ஹாரிஸ் ரவுஃப் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்தப் போட்டிக்கு பிறகு பாபர் அஸம் கூறும்போது, “இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு இந்தியா போன்ற அணிகளை எதிர்கொள்ள நம்பிக்கை தருகிறது. நாங்கள் எப்போதும் பெரிய போட்டிகளுக்கு தயாராகவே இருப்போம். இந்தியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டியில் எங்களது நூறு சதவீத செயல்திறனை நாங்கள் வெளிப்படுத்துவோம். சொந்த மண்ணில் விளையாடும்போது ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். அதை நாங்கள் பெற்றுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொழும்புவில் விளையாட உள்ளன.