லண்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 181 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி இருந்தார்.
நியூஸிலாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடர் சமனில் முடிந்தது. பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த சூழலில் 3-வது போட்டி நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 368 ரன்கள் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ், 124 பந்துகளில் 182 ரன்கள் குவித்தார். மலான், 96 ரன்கள் எடுத்தார்.
369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 187 ரன்கள் ரன்கள் எடுத்தது அந்த அணி. கிளென் பிலிப்ஸ் மட்டுமே அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். வோக்ஸ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.