இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் அதிவேகமாக உள்ளது. இந்தச் சூழலில் சில நிறுவனங்கள் வேலைக்கு ஆள் தேடும் படலத்தில் ஏஐ சாட்பாட்களின் உதவியை நாடுகின்றன. இது விண்ணப்பதாரர்களுக்கு லேசான சங்கடத்தை தந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.
கடந்த ஆண்டு ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி அறிமுகமானது. பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் வல்லமை கொண்டது. கதை, கட்டுரை, கவிதை, கோடிங் என அனைத்தையும் இதில் பெறலாம். தொடர்ச்சியாக பல சாட்பாட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆட்சேர்ப்பில் உதவும் சாட்பாட்கள்: இந்த நிலையில், சில நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் நியமிக்கும் பணியியல் ஏஐ சாட்பாட்களின் உதவியை நாடி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இது இருந்தாலும் இப்போது இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இப்போதைக்கு இது ப்ளூ காலர் பணி சார்ந்த வேலைகளுக்கு ஆட்களை நியமிக்க உதவுவதாக தெரிகிறது.
சுகாதாரம், சில்லறை வணிகம் மற்றும் உணவகம் சார்ந்த துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய சாட்பாட்கள் மேலை நாடுகளில் உதவி வருகிறதாம். மெக்டொனால்ட்ஸ், வெண்டிஸ், சிவிஎஸ் ஹெல்த் மற்றும் லோவ்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒலிவியா எனும் சாட்பாட் உதவியை இதற்காக பயன்படுத்துகின்றன. லோரியல் நிறுவனம் மியா சாட்பாட்டை பயன்படுத்துகிறது. இந்த இரண்டு சாட்பாட்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கியவை.
என்ன மாதிரியான பணிகளை செய்யும்? – இந்த சாட்பாட்கள் பெரும்பாலும் சாட்ஜிபிடி கொண்டிருக்கும் வல்லமையை கொண்டிருக்காவிட்டாலும் வேலை சார்ந்து வரும் விண்ணப்பங்களை அலசி, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் சார்ந்த விவரங்களை தெரிவிக்கும் பிரதான பணிகளை மேற்கொள்ளுமாம். அதோடு சில கேள்விகளை விண்ணப்பதாரர்களிடம் கேட்கும் என்றும் தெரிகிறது. ‘வாரத்தின் கடைசி நாட்களில் பணி செய்வீர்களா?’ என்பது போல சில அடிப்படை கேள்விகளை வினவி, அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளும்.
அதனடிப்படையில் தகுதியானவர்களை ஆட்கள் தேர்வு செய்வதற்கான அடுத்தக்கட்ட நிலைக்கு வரசொல்லி அழைப்பு விடுக்கும் என தெரிகிறது. சமயங்களில் தகுதியான விண்ணப்பங்களை அல்கரிதம் மாறி வரும் பதில்களின் அடிப்படையில் நிராகரிக்கிறது என ஏஐ சாட்பாட் உடன் நேர்காணலில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்கில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய ஆட்டோமேஷன் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் பாலினம் மற்றும் இன ரீதியான விஷயங்கள் கண்காணிப்பதும், கட்டுபடுத்துவதும் அவசியம் என சொல்லி சட்டமும் அறிமுகமாகி உள்ளதாக தகவல். அமெரிக்காவின் இலினொய் பகுதியில் ஏஐ சார்ந்த வீடியோ நேர்காணல் குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்து, அவர்கள் ஒப்புதலுடன் நேர்காணல் செய்ய வேண்டும் என வேலைக்கு ஆட்களை சேர்க்கும் நிறுவனங்களுக்கான சட்டம் பயன்பாட்டில் உள்ளது.
ஏஐ சாட்பாட்களின் துணையுடன் நிறுவனங்கள் ஆள் சேர்க்க செலவிடும் தொகை குறைவதாக தெரிகிறது. இது ஹெச்.ஆர் துறையை சேர்ந்தவர்களுக்கு ஆட்சேர்ப்பின் முதல் நிலையில் உதவுவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் மில்லியன் கணக்கான விண்ணப்பங்களை துரிதமாக பார்த்து, தகுதியான நபர்களை தேர்வு செய்ய முடிவதாக சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் நடிகர் ஃபஹத் பாசில் வேலை தேடி நேர்காணலுக்கு வந்தவர்களுடன் ஒருவராக வந்து, அவர்களது செயலை அருகில் இருந்து கவனித்து, ஆட்களை ஸ்மார்ட்டாக தேர்வு செய்வார். அது போன்ற பணியை தான் சாட்பாட் செய்கிறது. இருந்தாலும் சமயங்களில் சில தவறுகளை அது செய்வதாகவும் வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் ஆதங்கத்துடன் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
அதேநேரத்தில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து, சாட்பாட் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தருகிறது. அதுவே ஆறுதல் தான் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிக் நெட் சொல்கிறார். இதற்கு முன்பு அது கூட இல்லை என்பது அவரது கருத்து. அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் இப்போது ப்ளூ காலர் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய சாட்பாட்கள் உதவி வருகின்றன. வரும் நாட்களில் இன்னும் பல சர்ப்ரைஸ்களை சாட்பாட்கள் கொடுக்கலாம்.