இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). மனிதனுக்கு இருக்கும் நுண்ணறிவுத் திறனை இயந்திரங்களுக்கு கொண்டு வரும் ஸ்மார்ட் முயற்சியாக 20-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஏஐ சார்ந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. படிப்படியான பரிணாம வளர்ச்சியை எட்டி இன்று மனிதர்களுக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது ஏஐ.
கணினியின் தந்தை என போற்றப்படும் சார்லஸ் பாபேஜ், உலகின் முதல் கணினி நிரலாளர் ஏடா லவ்லேஸ் (Ada Lovelace) போன்ற அறிஞர்கள் கூட இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவுத் திறனை பிற்காலத்தில் பெறும் என எண்ணியிருக்க மாட்டார்கள். ஏஐ சார்ந்த ஆராய்ச்சிகள் தொடங்கி 100 ஆண்டுகள் கூட முழுமையாக எட்டாத நிலையில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் அதிவேகமாக உள்ளது. ஏஐ சார்ந்த ஆராய்ச்சியின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவராக அறியப்படுகிறார் மார்வின் மின்ஸ்கி.