கொழும்பு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன்மூலம் 8-வது முறையாக ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணியின் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மொகமது சிராஜ் உதவினார்.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை, பாகிஸ்தானில் நடைபெற்றது. லீக் போட்டிகள் பாகிஸ்தான், இலங்கையிலும், சூப்பர்-4 சுற்றுப்போட்டிகள் இலங்கையிலும் நடைபெற்றன. இறுதிச்சுற்றுக்கு இந்தியா, இலங்கை அணிகள் தகுதி பெற்ற நிலையில் இறுதிச் சுற்று ஆட்டம் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் ஆட்டம் சிறிது தாமதமானது. இதைதொடர்ந்து, 3.40-க்கு ஆட்டம் தொடங்கியது.
முதலில் இலங்கை அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா, குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே, குசல் பெரேராவை வெளியேற்றினார் பும்ரா. பெரேரா ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மொகமது சிராஜ் வீசிய 4-வது ஓவரில் இலங்கை அணியின் சரிவு தொடங்கியது.இந்த ஓவரின் முதல், 3, 4, 6-வது பந்துகளில் முறையேபதும் நிசங்கா (2 ரன்கள்), சதீரா சமர விக்ரமா (0), அசலங்கா (0), தனஞ்ஜெயா டி சில்வா (4) ஆகியோரது விக்கெட்களை பதம் பார்த்தார் மொகது சிராஜ்.
ஒரே ஓவரில் இலங்கையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததால், அந்த அணி 8 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. இதைத் தொடர்ந்து 6-வது ஓவரில் தசன் ஷனகாவையும் (0), 12-வது ஓவரில் குசல் மெண்டிஸையும் (17) பெவிலியனுக்கு அனுப்பினார் மொகமது சிராஜ். இதனால் 33 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இலங்கை அணி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இறுதியாக வெல்லாலகே (8), மதுஷன் (1), மதீஷாபதிரனா(0) ஆகியோரது விக்கெட்களை ஹர்திக் பாண்டியா வீழ்த்த 50 ரன்களில் இலங்கையின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 15.2 ஓவர்களில் இலங்கை இன்னிங்ஸ் முடிவுற்றது. இந்திய அணி சார்பில் சிராஜ் 6, பாண்டியா 3, பும்ரா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 23, ஷுப்மன் கில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குறைந்த அளவு பந்துகள் வீசப்பட்ட ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இந்தப் போட்டி 3-வது இடத்தைப் பிடித்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 129 பந்துகளே வீசப்பட்டன. இந்த வரிசையில் முதலிடத்தில் நேபாளம், அமெரிக்க அணிகள் மோதிய போட்டி (104 பந்துகள்) உள்ளது. 2-வது இடத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள்மோதிய போட்டி (120 பந்துகள்) உள்ளது.
ஒருநாள் போட்டி இறுதிச் சுற்று வரலாற்றில் 2-வது முறையாக இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் முறையாக 1998-ல் ஜிம்பாப்வேயுடன் ஷார்ஜாவில் மோதிய போட்டியில் விக்கெட் இழப்பின்றி 197 ரன்கள் சேர்த்து இந்தியா வெற்றி கண்டது.
5 ஆண்டுகளுக்குப் பின்… இந்திய அணி 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச போட்டியில் கோப்பையை வென்றது. இதற்கு முன்பு கடைசியாக 2018-ல் ஆசியக் கோப்பையை வென்றிருந்தது. இதனிடையே, 2019-ல் 50 ஓவர்உலகக் கோப்பை, 2022-ல் டி 20 உலகக் கோப்பை ஆகியவற்றில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2019-ம் ஆண்டு நியூஸிலாந்திடமும், 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடமும் இந்திய அணி தோல்வி அடைந்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கோப்பையை வென்றுள்ளதால், கோப்பை வறட்சிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
அதிக கோப்பைகள்: ஆசியக் கோப்பையை அதிக முறை வென்ற அணிகள் வரிசையில் இந்தியா முதலிடத்தில் (8 முறை) உள்ளது. அதற்கடுத்த இடங்களில் இலங்கை (6 முறை), பாகிஸ்தான் (2 முறை) அணிகள் உள்ளன.
தொடர் நாயகனாக குல்தீப் தேர்வு…
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடர் நாயகனாக 9 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
நேற்றைய இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வீழ்த்திய சிராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இதற்காக அவருக்கு பரிசுத்தொகையாக 5 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டது. அந்தத் தொகையை கொழும்பு பிரேமதாசா மைதான ஊழியர் ஒருவருக்கு பரிசாக அளித்தார் சிராஜ். போட்டி சிறப்பாக நடக்க உதவி செய்தமைக்காக மைதான ஊழியர்களுக்கு அந்தத் தொகையை சிராஜ் வழங்கினார்.
அதேபோல், கொழும்பு, பல்லக்கெல்லே மைதான ஊழியர்கள் சிறப்பாக மைதான பராமரிப்புப் பணிகளைச் செய்தமைக்காக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வழங்கியது.
போட்டியை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவாவுடன் கண்டு ரசித்தார்.
இலங்கை குறைந்த ஸ்கோர்: ஒருநாள் போட்டிகளில் 2-வது மிகக் குறைந்த ஸ்கோரை இலங்கை பதிவு செய்துள்ளது. இந்த வரிசையில் இலங்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2012-ல் 43 ரன்களுக்குச் சுருண்டிருந்தது. நேற்றைய ஆட்டத்தில் 50 ரன்களுக்கும், 1986-ல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 55 ரன்களுக்கும், 2014-ல் இங்கிலாந்துக்கு எதிராக 67 ரன்களுக்கும், 2023-ல் இந்தியாவுக்கு எதிராக 73 ரன்களுக்கும் இலங்கை அணி சுருண்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரையும் இலங்கை பதிவு செய்தது.