புதுடெல்லி: வரும் 18-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று வெளியான நாடாளுமன்ற அலுவலக அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவித்தது. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மொத்தம் 5 அமர்வுகள் நடைபெறும் என்றும். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இதற்கான நோக்கம் என்ன என்பது அப்போது வெளியிடப்படவில்லை.
இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் எதற்காக இந்த கூட்டம்? சிறப்பு கூட்டத்தின் நோக்கம் என்ன? நிகழ்ச்சி நிரலை வெளியிடுமாறும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. இந்நிலையில், தற்போது இந்த சிறப்பு கூட்டத்தொடர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளன்று நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் நாடாளுமன்றத்தின் சாதனைகள், அனுபவம் போன்றவை விவாதிக்கப்பட உள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்குவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
In addition to other Business, Lok Sabha will discuss “Parliamentary Journey of 75 years starting from Samvidhan Sabha – Achievements, Experiences, Memories and Learnings” on the first day of the 13th Session of 17th Lok Sabha on 18 September, 2023.
— LOK SABHA (@LokSabhaSectt) September 13, 2023