
புதுடெல்லி: இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் 75 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகாடமி அம்ரித் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விருது தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 84 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற சங்கீத நாடக அகாடமி அம்ரித் விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன். 75 வயதுக்கு மேற்பட்ட 70 ஆண்கலைஞர்களும் 14 பெண் கலைஞர்களும் இந்த விருதுகளைப் பெற்றனர். தமிழ்நாட்டிலிருந்து 4 கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ரூ.1 லட்சம் ரொக்கமும் விருதுப் பட்டயமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இவ்விருதுகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “நம் நாட்டு கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதன் மூலம் நமது இந்திய கலாச்சாரத்துக்கு மரியாதை செலுத்துகிறோம். இதன் மூலம் இந்தியாவின் புகழ் உலக அளவில்பரவுகிறது. இந்தியப் பாரம்பரியம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைமிக்கது. அந்தப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலைஞர்களை, கலைகளை பாதுகாப்பது, அதை வளர்த்தெடுப்பது முக்கியம்” என்று அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவிலிருந்து 6 கலைஞர்கள், அசாம் மற்றும் ராஜஸ்தானிலிருந்து தலா 5 கலைஞர்கள் இவ்விருதைப் பெற்றனர். தமிழ்நாடு, மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா, கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தலா 4 கலைஞர்கள் விருது பெற்றனர்.