State

‘3-ல் எந்தக் கொடி?’, ‘லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இல்லை’ – ஓபிஎஸ் Vs இபிஎஸ் தரப்பு காரசார வாதம் | Ban on use of AIADMK name, flag: Orders reserved in OPS Appeal case

‘3-ல் எந்தக் கொடி?’, ‘லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இல்லை’ – ஓபிஎஸ் Vs இபிஎஸ் தரப்பு காரசார வாதம் | Ban on use of AIADMK name, flag: Orders reserved in OPS Appeal case
‘3-ல் எந்தக் கொடி?’, ‘லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இல்லை’ – ஓபிஎஸ் Vs இபிஎஸ் தரப்பு காரசார வாதம் | Ban on use of AIADMK name, flag: Orders reserved in OPS Appeal case


சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால தடையை நீக்க கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த கூடாது என தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு கட்சியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.இந்த வழக்கை கடந்த நவ.7-ம் தேதி விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓபிஎஸ், அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என இடைக்கால தடை விதித்தார்.

மேல்முறையீடு: இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கட்சியில் இருந்து என்னையும், என் ஆதரவாளர்களையும் நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட பிரதான வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என எனக்கு தடை விதிக்க முடியாது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக பெயர், கொடி உள்ளிட்டவற்றை நாங்கள் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதால், எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இடைக்கால தடை தவறு: இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், “தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கெனவே இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு. கொடி, சின்னம் பயன்படுத்த கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது. இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பிரதான வழக்கு நவம்பர் 30-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

அதிமுகவில் 3 கொடிகள்: ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், “அதிமுகவில் மூன்று கொடிகள் உள்ளன. இதில், எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி வழக்கில் விளக்கம் அளிக்கவில்லை. அண்ணா விரல் காட்டுவதுதான் உண்மையான கொடி.எனவே, அதனை ஓபிஎஸ் பயன்படுத்தி வருகிறார். லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவாக தனக்கு உள்ளது. அவர்கள் நீக்கப்படாத நிலையில், அவர்களுக்கும் எப்படி தடை விதிக்க முடியும். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கைகளில் கட்சி சின்னமான இரட்டை இலையை பச்சை குத்தி உள்ளனர். இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவால் அதை நீக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என நகைப்புடன் தெரிவித்தனர்.

.

தடை உத்தரவை நிறுத்திவைக்க… – தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், “பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்று கூறி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து பிரதான சிவில் வழக்கில் தான் முடிவெடுக்க முடியும். பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எந்தக் காரணமும் குறிப்பிடாமல் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு செல்லத்தக்கதல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக எந்த நேரடி உத்தரவும் இல்லாதபோது, அவர் தனக்கு எதிராக தடை கோரி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இதுதொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். எனவே, அதுவரை தடை உத்தரவு அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இல்லை: அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு முறை அவகாசம் கோரிய ஓபிஎஸ் தரப்பு மீண்டும் அவகாசம் கோரியது. பதில் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்த பிறகே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கட்சியில் இருந்து நீக்கியதை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. பொதுக்குழு தீர்மானத்தின்படி அவர்கள் கட்சியில் இல்லை. வழக்கில் பதில்மனுவும் தாக்கல் செய்யவில்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாதபோது அதன் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த முடியும்?

இன்னும் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிவரும் ஓபிஎஸ், கட்சியின் பொதுச் செயலாளரை நீக்குகிறார். அவருக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் எல்லாம் இல்லை. அப்படி இருப்பதாக கூறினாலும் முகம் தெரியாத அவர்களை கருத்தில்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் யாரையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவிக்கவில்லை. எனவே, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்த இந்த மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. நவம்பர் 30-ம் தேதி வரை காத்திருக்காமல், தனி நீதிபதியிடமே தடையை நீக்க கோருவதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில், மறுநாளே தடையை நீக்கும்படி கோரியிருக்கலாம்.

தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்த இடைக்காலத் தடை உத்தரவு இறுதியானது அல்ல. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தடை விதிக்கவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களை தனி நீதிபதி விளக்கிய பிறகுதான் இந்த உத்தரவை பிறப்பித்தார். 30 ஆண்டுகளாக கட்சியில் உள்ள ஓபிஎஸ் எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார்கள் என்பது தெரியவில்லை என கூறுவது வினோதமாக உள்ளது. அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர் என்று கூறியே அறிக்கை வெளியிடுகிறார்.

பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்ததையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக கட்சியின் சொத்துகளான கட்சி கொடி, லெட்டர் பேடு ஆகியவை யாருக்கும் சொந்தமானதல்ல. எனவே, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

தீர்ப்புக்காக ஒத்திவைப்பு: அப்போது நீதிபதிகள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சியினரை நீக்க ஓபிஎஸ்ஸுக்கு அதிகாரம் உள்ளதா? கட்சி கொடியை பயன்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், “கட்சியின் கொடி கட்சிக்கு சொந்தமானதல்ல. தன்னால் கட்சியினர் நீக்கப்படுவது இந்த வழக்குக்கு அப்பாற்பட்டது” என விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தடையை நீக்கக் கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *