விசாகப்பட்டினம்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இந்தத் தொடர் உள்ளதால் இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுத்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் நேற்று 2வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த உடன் இங்கிலாந்து அணியினர் இந்தியாவில் இருந்து வெளியேறி அபுதாபிக்கு அவசரமாக புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் அபுதாபிக்கு ஏன் சென்றனர் என்பதற்கான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி 3வது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் கிட்டத்தட்ட 10 நாட்கள் உள்ளதால் இங்கிலாந்து அணியினர் அபுதாபிக்கு சென்று அங்கு ஒரு வாரம் பயிற்சி முகாமில் ஈடுபட்டு புத்தணர்ச்சியுடன் பயிற்சிகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே முதலில் அபுதாபிக்கு சென்ற இங்கிலாந்து அணியினர் அங்கு 2 முதல் 3 வாரங்களில் பயிற்சிகளை எடுத்த பின்பே இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.