
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் சிபிஎஸ்இ தெற்கு மண்டலம்1-ஐ சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய பகுதிகளில் இருந்து 26 பள்ளிகள் பங்கேற்றன.
இந்தத் தொடரில் புள்ளிகளின் அடிப்படையில் மாணவர் மற்றும் மாணவியர் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் தேசிய அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே நடைபெறவுள்ள இறுதி சுற்று போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றன. மாணவியர் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் எஸ்.ரிதுமிகா மற்றும் மாணவர் பிரிவில் ஜி.அகிலேஷ் ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன், வெற்றி பெற்ற அணி வீரர்களுக்குச் சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கினார்.
விழாவில் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி, செயலாளர் கவிதாசன், தமிழ்நாடு ஹாக்கி சங்க பொதுச்செயலாளர் செந்தில் ராஜ்குமார், பள்ளி முதல்வர் இரா.உமாமகேஸ்வரி, சிபிஎஸ்இ தெற்கு மண்டலம்-1 பார்வையாளர் ஆர்.ரவிச்சந்திரன், பள்ளியின் கல்வி ஆலோசகர் வெ.கணேசன், பள்ளித் துணை முதல்வர் ச.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.