State

“நிதி பகிர்வில் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு பச்சைத் துரோகம்” – வைகோ கண்டனம் | Centre BJP government betrays Tamil Nadu in fund distribution – Vaiko condemns

“நிதி பகிர்வில் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு பச்சைத் துரோகம்” – வைகோ கண்டனம் | Centre BJP government betrays Tamil Nadu in fund distribution – Vaiko condemns


சென்னை: “தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு கேட்ட நிதியில், மத்திய அரசு ஒரு சதவீதத்துக்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே வழங்கி இருக்கிறது. அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்”, என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு 37,907 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு நேற்று (ஏப்.27) விடுவித்துள்ளது.

தமிழக அரசு கேட்ட நிதியில், மத்திய அரசு ஒரு சதவீதத்துக்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு வழங்கி இருக்கிறது. ஆனால் கர்நாடக மாநிலத்துக்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு 3498.82 கோடி ரூபாயை அளித்திருக்கிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்துதான் கர்நாடக மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. தமிழகத்தை பாஜக அரசு வஞ்சித்து வருவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

2015-ம் ஆண்டு சென்னை சந்தித்த பெருமழை வெள்ளம், அதன் பின்னர் உருவான வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், நிவர் புயல் மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றுக்கு கடந்த 9 ஆண்டில் தமிழக அரசு மத்திய பாஜக அரசிடம் கேட்ட தொகை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 655 கோடி ரூபாய் ஆகும். ஆனால் மோடி அரசு அளித்த தொகை வெறும் 5884.49 கோடி ரூபாய் மட்டுமே. தமிழக அரசு கேட்ட தொகையில் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக அரசு மத்திய அரசுக்கு வரியாக கொடுக்கும் ஒரு ரூபாயில் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது. ஆனால் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்துக்கு ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் 73 பைசா மத்திய அரசு வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டுத் தொகை 63 ஆயிரத்து 246 கோடி ஆகும். இதில் மத்திய அரசு 50 சதவீதம் தமிழகத்துக்கு அளிக்க வேண்டும். ஆனால் இதுவரை 3273 கோடி ரூபாய் அதாவது திட்ட மதிப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

ஆனால் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மராட்டிய மாநிலத்துக்கு 28,877 கோடி ரூபாயும், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்துக்கு 15 218 கோடி ரூபாயும், பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு 12919 கோடி ரூபாயும், பெங்களூருக்கு 19,236 கோடி ரூபாயும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 2700 கோடி ரூபாய் விடுவிக்காமல் 100 நாள் வேலை திட்டத்தையே ஒழித்துக்கட்ட முனைந்துள்ளது. மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரியின் நிதி பங்கீட்டில் தமிழக அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களை நிதி நெருக்கடியில் தள்ளி நிதி தன்னாட்சியை சீர்குலைத்து வரும் மோடி அரசு, மாநில அரசுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 10-வது நிதிக்குழுவில் இருந்த 6.64 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைத்து, 15 ஆவது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாக குறைத்துவிட்டது.

அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். 18-வது மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி மக்களின் பேராதரவோடு வெற்றி ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அப்போது மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்; நிதிப் பகிர்வில் தற்போதுள்ள பாரபட்சமான அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும்”, என்று அவர் தெரிவித்துள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *