State

“தமிழக மக்களை அவமதிக்கும் செயல்” – மத்திய அரசின் பேரிடர்  நிதி ஒதுக்கீடு; முத்தரசன் கண்டனம் | Mutharasan condemns central government disaster fund allocation

“தமிழக மக்களை அவமதிக்கும் செயல்” – மத்திய அரசின் பேரிடர்  நிதி ஒதுக்கீடு; முத்தரசன் கண்டனம் | Mutharasan condemns central government disaster fund allocation


சென்னை: “இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையிலும் மோடியின் பாஜக மத்திய அரசு இரக்கம் காட்ட முன் வரவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிடும் சூழலில் மத்திய அரசு மிக, மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தையும், மக்களையும் அவமதிக்கும் செயலாகும்”, என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தையும், மக்களையும் வஞ்சித்து வருகின்றது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மாநில அரசின் வருவாய் ஆதாரங்களை வெட்டிக் குறைத்தது. இழப்பீட்டு நிதி மேலும் சில ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. நீட் நுழைவுத் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க மறுத்து வருவது, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது.

அவசர கால தேவைக்கு மாநில அரசு கடன் வாங்க அனுமதி மறுப்பது என்று தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக மத்திய அரசு, தமிழ்நாடு இயற்கை பேரிடர் தாக்குதலால் பேரிழப்பை சந்தித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நேரத்தில் கரம் நீட்டி உதவாமல் உதாசீனப்படுத்தி, அவதூறு பரப்பு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செலில் ஈடுபட்டதை தமிழக மக்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள்.

மிக்ஜாம் புயலும், பெருமழையும் தாக்குதல் நடத்தியது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையிலும் மோடியின் பாஜக மத்திய அரசு இரக்கம் காட்ட முன் வரவில்லை. ரூ. 37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் கால சேதாரங்களை சீர்படுத்த தேவை என்ற கோரிக்கையை மத்திய அரசு அலட்சியம் செய்த நிலையில் தமிழக அரசு உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் தலையிடும் சூழலில் மத்திய அரசு மிக, மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தையும், மக்களையும் அவமதிக்கும் செயலாகும். பாஜக மத்திய அரசின் பாரபட்சம் காட்டி, பழிவாங்கும் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக தமிழக அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”, என்று அவர் கூறியுள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *