செஞ்சுரியன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன் ஹெய்ன்ரிச் கிளாசன் 83 பந்துகளில் 174 ரன்கள் விளாசி மிரளச் செய்தார்.
செஞ்சுரியன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 416 ரன்கள் குவித்தது. ஹெய்ன்ரிச் கிளாசன் 83 பந்துகளில், 13 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன 174 ரன்கள் விளாசி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை மிரளச்செய்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டேவிட் மில்லர் 45 பந்துகளில், 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன 82 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக ரேஸா ஹெண்ட்ரிக்ஸ் 28, குவிண்டன் டி காக் 45, எய்டன் மார்க்ரம் 8, ராஸி வான் டெர் டஸ்ஸன் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 417 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 77 பந்துகளில், 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் சேர்த்தார்.
டேவிட் வார்னர் 12, டிராவிஸ் ஹெட் 17, மிட்செல் மார்ஷ் 6, மார்னஷ் லபுஷேன் 20, மார்கஸ் ஸ்டாயினிஸ் 18, டிம் டேவிட் 35, மைக்கேல் நேசர் 3, நேதன் எலிஸ் 18, ஆடம் ஸம்பா 9 ரன்களில் நடையை கட்டினர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் லுங்கி நிகிடி 4, காகிசோ ரபாடா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. கடைசி, 5வது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.