புதுடெல்லி: ஹரியாணா கலவரம், கொலை வழக்குகளில் தொடர்புடைய பசு பாதுகாவலர் மோனு மானேஸர் நேற்று கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் பரத்பூரை சேர்ந்தநசீர்(27), ஜுனைத்(35) என்ற இருவர் ஹரியாணாவின் பினானியில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் பசுக்களை கடத்தியதாகக் கூறி, பசு பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக வழக்கு பதிவாகி நடைபெறுகிறது. இந்த வழக்கில் பசு பாதுகாப்பு குழுவின் தலைவரான மோனு மானேஸர், அவரது சகாக்களான அனில், ஸ்ரீகாந்த், ரிங்கு செய்னி, லோகேஷ் சிங்லா ஆகிய நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவர்கள்.
இவர்களில் ஒரு குற்றவாளி அடுத்த நாள் கைதானார். மேலும் இருவர் கடந்த ஏப்ரல் 14-ல் ராஜஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். எனினும், முக்கியக் குற்றவாளியான மோனுவை ராஜஸ்தான் போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. இதற்கு ஹரியாணா காவல்துறை ஒத்துழைப்பு அளிக்காதது காரணம்என கூறப்பட்டது. மோனு, சமூகவலைதளங்களில் தனது கருத்து களையும், படங்களையும் அவ்வப்போது பதிவேற்றம் செய்துள்ளார். இந்நிலையில் ஹரியாணாவின் நூ பகுதியில் கடந்த ஜூலை 31-ம்தேதி ஜல அபிஷேக யாத்திரைக்கு விஸ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மோனு மானேசர் கலந்து கொள்வதாக சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பப்பட்டது. இதுபோன்ற பதிவால், ஹரியாணாவின் நூவில் நடைபெற்ற மதக்கலவரத்திற்கும் மோனுகாரணம் எனப் புகார் எழுந்தது.
இந்நிலையில், நேற்று மோனுவை ஹரியாணாவின் குருகிராம் செக்டர் 1-ல் அம்மாநிலப் போலீஸார் சுற்றி வளைத்தனர். இவர் மீது ஹரியாணாவிலும் பல வழக்குகள் உள்ளன. 2019-ல்முதல்முறையாக கொலை முயற்சிவழக்கு பதிவானது. ஹரியாணாவின் பட்டோடி கிராமம், குருகிராமிலும் இரண்டு குற்றவியல் வழக்குகள் பதிவாகி உள்ளன. எனினும், மோனுவை ராஜஸ்தான் போலீஸாரிடம் ஒப்படைக்கும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
ஹரியாணாவின் மானேஸர் கிராமத்தைச் சேர்ந்த மோனு மானேஸர் என்றழைக்கப்படும் மோஹித் யாதவ், மேவாத்தின் பஜ்ரங்தளம் பசு பாதுகாவலர் படைக் குழுவின் தலைவராக உள்ளார். பாலிடெக்னிக்கில் படித்தகாலம் முதல் இவர் பஜ்ரங்தளம் அமைப்பில் இணைந்து பணியாற்றுகிறார்.