மும்பை: பிரபல இந்தி நடிகர் பீர்பால் கோஸ்லா மாரடைப்பால் கால மானார். அவருக்கு வயது 84. நடிகர் சதிந்தர் குமார் கோஸ்லா என்ற பீர்பால், இந்திப் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். 1967ம் ஆண்டு ‘உப்கார்’ என்ற இந்தி படம் மூலம் அறிமுகமான இவர், மராத்தி, பஞ்சாபி, போஜ்புரி உட்பட பல மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருடைய தனித்துவமான நடிப்பு ரசிகர்களால் விரும்பப்பட்டது. தர்மேந்திரா, அமிதாப்பச்சன் நடித்த ‘ஷோலே’ படத்தில் சிறைக் கைதியாக நடித்திருந்தார். இதில் அவர் நடிப்புப் பேசப்பட்டது. மேரா நாம் ஜோக்கர், நசீப், யாரானா, ஹம் ஹேன் ரஹி பியார் கே, அன்ஜான் உட்பட பல படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது.
மும்பை தாதரில் வசித்து வந்த அவருக்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவர் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. அவர் மறைவு இந்தி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது