
சென்னை: வெங்கட் பிரபு, சினேகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ள குழந்தைகளுக்கான திரைப்படம், ‘ஷாட் பூட் த்ரீ’. யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பாக அருணாச்சலம் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியுள்ளார். ஆனந்த் ராகவ், அருணாச்சலம் வைத்தியநாதன் திரைக்கதை அமைத்துள்ளனர். சிவாங்கி, பூவையார், ப்ரணிதி, கைலாஷ் ஹீட், வேதாந்த் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜேஷ் வைத்யா இசை அமைத்துள்ளார். ஒரு நாயின் மீது அதீத பாசம்கொண்ட சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்தப்படம். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற இந்தப்படம் 11 விருதுகளை வென்றுள்ளது.
இந்தப் படத்தை விலங்குகள் நல மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மேனகா காந்தி சமீபத்தில் பார்த்தார். “மிகச்சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம் இது. இத்திரைப்படத்தைக் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.