State

விமான நிலையம் தாண்டி வருவாயா? – சென்னை மெட்ரோ ரயிலை கிளாம்பாக்கம் வரை எதிர்நோக்கும் மக்கள் | People expect for the metro train to Kelambakkam

விமான நிலையம் தாண்டி வருவாயா? – சென்னை மெட்ரோ ரயிலை கிளாம்பாக்கம் வரை எதிர்நோக்கும் மக்கள் | People expect for the metro train to Kelambakkam
விமான நிலையம் தாண்டி வருவாயா? – சென்னை மெட்ரோ ரயிலை கிளாம்பாக்கம் வரை எதிர்நோக்கும் மக்கள் | People expect for the metro train to Kelambakkam


சென்னை: தென் சென்னை மக்களின் பொது போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்ய உதவும், விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தமிழகஅரசிடம் சமர்ப்பித்து 21 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி, விரைவாக செயல்படுத்த பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஆலந்தூர்- கோயம்பேடு இடையே முதல் மெட்ரோ ரயில் சேவை 2015-ம்ஆண்டு தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் படிப்படியாக முடிக்கப்பட்டன. தற்போது, பரங்கிமலை- சென்னை சென்ட்ரல், விமான நிலையம்- விம்கோ நகர் ஆகிய 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையில், தென் சென்னை மக்களின் பொது போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும்வகையில், சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. தொலைவில் நீட்டிப்பு செய்யதிட்டமிடப்பட்டது. இப்பாதை மற்றும் 12 நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.4,528 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த வழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய 12 மெட்ரோ நிலையங்கள் உயர்மட்ட பாதையில் அமைக்க பரிந்துரைக்கப்பட்டன.

இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதலுக்கு கடந்த 2021-ம்ஆண்டு நவ.26-ம் தேதி அனுப்பப்பட்டது. இருப்பினும், நெடுஞ்சாலைத் துறையின் விரைவு பாதை, மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதை இடையே இடப்பிரச்சினையால் சிக்கல் இருந்தது. பல கட்ட பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலை துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம் இடையே சமரசம் ஏற்பட்டு, ஒப்புதல் கிடைத்தது.

இதன்பிறகு, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகடந்த ஆண்டு செப்.22-ம் தேதி அனுப்பப்பட்டது. இதன் மதிப்பீட்டின்படி திட்ட செலவு மட்டும் ரூ. 4,625 கோடியாக உயர்ந்தது. புதுப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்து ஒரு ஆண்டை நெருங்குகிறது. ஒட்டுமொத்தமாக திட்ட அறிக்கை சமர்ப்பித்து 21 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்தத் திட்டம் தொடர்பாக தற்போது வரை தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளது. இதனால், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

தயானந்த கிருஷ்ணன்

இது குறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் கூறியதாவது: விமான நிலையம் – கிளாம்பாக்கம் விரிவான திட்ட அறிக்கையின் ஒப்புதலை அரசு தலைமை செயலர் தலைமையிலான சிறப்பு உயர்மட்ட அதிகாரகுழு முழுமையாக கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி வழங்கியது.

இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை ஒரு ஆண்டு மற்றும் 9 மாதங்கள் ஆகியும் இதுவரை நிதி ஒப்புதல் அளிக்கவில்லை. இது தாம்பரம் பகுதி மக்களிடத்தில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுபோக்குவரத்து தேவைக்காக, தாம்பரம் பகுதிக்கு சுமார் 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இந்த மக்களுக்கு இன்னும் மெட்ரோ ரயில் இணைப்பு மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

குறிப்பாக, பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் பகுதிமக்களின் பொது போக்குவரத்து தேவையின் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கப்பட உள்ள கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்தின் பயணிகள் மற்றும் பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

சென்னையின் மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் சராசாரியாக 2.50 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதன்மூலமாக, முக்கிய பொதுபோக்குவரத்தாக மெட்ரோ ரயில் வளர்கிறது. இதைதென் சென்னையுடன் இணைக்கும் விதமாக, கிளாம்பாக்கம் வரை விரிவுப்படுத்தினால், மேலும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்று மெட்ரோ ரயில் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தாமரை மணாளன்

இது குறித்து குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த தாமரை மணாளன் கூறியதாவது: தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு அல்லது தாம்பரத்தில் இருந்து வட சென்னைக்கு நேரடியாக சென்றுதிரும்ப மெட்ரோ ரயில் வசதி இல்லை.இதற்காக, விமான நிலையம் சென்று அங்கிருந்து மெட்ரோ ரயிலில் செல்லும் நிலை இருக்கிறது.

எனவே, விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில்திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்து எண்ணிக்கையும் குறையும் என்றார்.

த.ஏழிசைவாணி

தாம்பரத்தைச் சேர்ந்த த.ஏழிசைவாணி கூறும்போது, “எளிதாகவும், விரைவாகவும் பாதுகாப்பாகவும், பயணம் மேற்கொள்ள மெட்ரோ ரயில் உதவியாக இருக்கிறது. ரயில்நிலையத்தில் கழிப்பறை வசதி தூய்மையாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது.

ஆனால் எனது பகுதியில் இருந்து மெட்ரோ ரயில் சேவை இல்லாதது குறையாகவே உள்ளது. இதனால் தாம்பரத்தில் இருந்து மின்சார ரயிலில் திரிசூலம் வந்து, அங்கிருந்து நடந்து விமானநிலையம் சென்று, மெட்ரோ ரயிலில் கல்லூரிக்குச் சென்று வருகிறேன். எனவே, விமான நிலையம்- கிளாம்பாக்கம் இணைப்பு அவசியம்” என்றார்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக்கிடம் கேட்டபோது, “சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோரயில் நீட்டிப்பு திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆய்வில் இருக்கிறது. தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தபிறகு, திட்டப்பணி தொடங்கப்படும்” என்றார்.

தினசரி 1.50 லட்சம் பயணிகள்: விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம் நிறைவேற்றியபிறகு, இந்த வழித்தடத்தில் ஓடும் மெட்ரோ ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணிப்பார்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி 2026-ம் ஆண்டில் தினசரி 1.50 லட்சம் பேரும், 2038-ல் 2.99 லட்சம் பேரும், 2048-ல் 4.36 லட்சம் பேரும், 2053-ல் 5.15 லட்சம் பேரும் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *