மாஸ்கோ: ரஷ்யாவில் நிகழ்ந்த ஜெட் விமான விபத்தில் தனியார் ராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஷின் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
வாக்னர் குழு ரஷ்யாவில் இயங்கிவந்த தனியார் ராணுவம் ஆகும். வாக்னர் குழுவை சில நாடுகள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்துவது உண்டு. உக்ரைன் உடனான போரில், ரஷ்யா வாக்னர் குழுவை பயன்படுத்தியது.
இந்நிலையில், உக்ரைனுடனான போரில் ரஷ்யா தங்கள் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு குற்றம்சாட்டியது. ரஷ்ய அரசுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக, கடந்த ஜூன் 24-ம் தேதி வாக்னர் குழுவின் தலை வர் யெவ்ஜெனி ப்ரிகோஷின் 5 ஆயிரம் படைவீரர்களுடன் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் சென்றார். இது ரஷ்ய அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்னர் குழுவின் அணிவகுப்பு ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அன்றைய தினமே வாக்னர் குழுவுடன் ரஷ்ய தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால், வாக்னர் குழுவின் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், யெவ்ஜெனி ப்ரிகோஷின் தனது குழுவினருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தங்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக, யெவ்ஜெனி ப்ரிகோஷினை பழிவாங்கும் நோக்கில் ரஷ்ய அரசு திட்டமிட்டு இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.