புதுடெல்லி: இந்திய விமானப்படைக்காக ஏர்பஸ் நிறுவனம் தயாரித்த முதலாவது சி-295 ரக விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்காக சி-295 ரக விமானங்களைத் தயாரித்து அளிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஏர் பஸ் நிறுவனமும் கடந்த 2021-ல் கையெழுத்திட்டன.
இதைத் தொடர்ந்து ஸ்பெயினின் செவில் நகரிலுள்ள உற்பத்தி ஆலையில் விமானத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சி-295 வகையைச் சேர்ந்த56 விமானங்களை இந்திய விமானப் படைக்கு அளிக்குமாறு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் முதல் விமானம் நேற்று இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி முதல் விமானத்தைப் பெற்றுக்கொண்டார். அப்போது வி.ஆர்.சவுத்ரி கூறியதாவது: இதுபோன்று மொத்தம் 56 விமானங்கள் வாங்கப்படவுள்ளன. ஸ்பெயினில் தயாரிக்கும் 16 விமானங்கள் 2024-க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அதேபோல் இந்தியாவில் தயாரிக்கப்படும் மீதமுள்ள 40 விமானங்கள், 2031-ம் ஆண்டின் இறுதிக்குள் ஒப்படைக்கப்படும். இதன்மூலம் இந்திய விமானப்படை, தனது வான்வழித் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத்தில் உற்பத்தி: இந்த ஒப்பந்தத்தின்படி 16 விமானங்கள் ஸ்பெயினிலும், 40 விமானங்கள் குஜராத்திலுள்ள வதோதராவில் உள்ள ஆலையிலும் உற்பத்தி செய்யப்படும். வதோதரா ஆலையானது, ஏர் பஸ் நிறுவனமும், டாடா நிறுவனமும் கூட்டு சேர்ந்து ஏற்படுத்தியதாகும். இந்த சி-295எம்டபிள்யூ ரக விமானமானது 5 முதல் 10 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது.
பாராசூட் குழுவினரை குறிப்பிட்ட இடத்தில் தரை இறக்குவதற்கும், சரக்குகளை சுமந்து சென்று தரை இறக்குவதற்கும் இந்தவகையிலான விமானங்கள் பயன்படும்.
இந்த விமானத்தை குறுகிய தூர ஓடுபாதையில் தரையிறக்கவும், மேலெழுப்பவும் முடியும். மேலும் இது தொடர்ச்சியாக 11 மணி நேரம் பறக்கும் சக்தி படைத்தது. இதுபோன்ற விமானங்கள் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், உக்ரைன், பிரேசில், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.