சென்னை: கடந்த 2022 மே 20-ம் தேதி, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பொறியாளர் சஞ்சய் பிரகாஷ், கிச்சிபாளையத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
அவர்கள் இருவரும், செட்டிச்சாவடி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து யூ-டியூப் உதவியுடன் துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களது கூட்டாளி அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலன்என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு ‘க்யூ’ பிரிவுக்கும், பின்னர், தேசிய புலனாய்வு முகமைக்கும் (என்ஐஏ) மாற்றப்பட்டது. சிறையில் இருந்த சஞ்சய்பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர். இருவரும் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும், தமிழகத்திலும் ஓர்அமைப்பை நிறுவி ஆயுதப் போராட்டம் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களுடன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலரும் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து தமிழகத்துக்கு சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் நிதி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கு சொந்தமான 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில், ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள், 4 பென்டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. புலிகள் இயக்கம் தொடர்பான சட்ட விரோத புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சம்பந்தப்பட்ட 6 பேரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டிருந்தது.
முதல்கட்டமாக சாட்டை துரைமுருகன், மதிவாணன், முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் முன்னிலையில் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், விஷ்ணு பிரசாத் ஆகிய 2 பேரிடம் நேற்று காலை விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் சிலரிடம் விசாரிக்க திட்டம்: இவர்கள் அளித்த பதில்கள் வீடியோ பதிவாகவும், எழுத்து வடிவிலும் வாக்குமூலமாகப் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் சிலரிடம் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் பல்வேறுதகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.