மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த வாக்னர் குழுவின் தலைவர் பிர்கோஸின் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் சென்ற விமானம் சிறிய ரக ஏவுகணையால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
பிர்கோஸின் எம்ப்ரேர் லெகஸி 600 ரக விமானத்தில் பயணித்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் தான் விமானத்தில் இருந்துள்ளனர். மாஸ்கோவில் இருந்து பிர்கோஸின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். விமான வெகு சீராகவே சென்று கொண்டிருந்தது. திடீரென விமான தலை குப்புறப் பாய்ந்தது. 30 விநாடிகளில் அந்த விமானம் 8000 அடி கீழே விழுந்தது என்று விமானத்தை டிராக் செய்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நடந்தது எல்லாம் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்துவிட்டதாக ஃப்ளைட்ரேடார் 24 என்ற அமைப்பின் ஊழியர் பெட்செனிக் கூறியுள்ளார். மேலும், விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் விமானி ஏதேனும் போராடியிருக்கலாம் ஆனால், விழுவதற்கு முந்தைய நொடி வரை அது சலனமில்லாமல் சென்றது. விமானத்தில் சிறு கோளாறு இருந்ததாகக் கூட தெரியவில்லை.
இந்த விமான விபத்து குறித்து ரஷ்ய உளவுஅமைப்பினர் கிரிமினல் விசாரணையில் ஈடுபட்டுள்ளன. ஆனால், பெயர் குறிப்பிட விரும்பாத சிலர், ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், பிர்கோஸின் சென்ற விமானம் சர்ஃபேஸ் டூ ஏர் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கூறினார். ஆனாலும், இது உறுதிப்படுத்தப்படவில்லை.
பிர்கோஸின் சென்ற விமானத்தைத் தயாரித்த பிரேசில் விமான தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேர் எஸ்ஏ, அந்த விமானத்துக்கு கடந்த 13 ஆண்டுகளில் தரச் சேவை ஏதும் செய்ததில்லை என்று கூறியுள்ளது. இது அந்நிறுவனம் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது. ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளை தாங்களும் பின்பற்றுவதால் அங்கே எந்த விமான சேவையிலும் ஈடுபடுவதில்லை என்று கூறியுள்ளது. RA-02795 பதிவெண் கொண்ட அதே விமானம் மூலம் தான் கிளர்ச்சி முறிந்த பின்னர் பிர்கோஸின் பெலாரஸ் நாட்டுக்கு தப்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் இயங்குகின்றனர்.
உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர். வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புதினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.