Tour

வரலாற்றை சுமந்து நிற்கும் பழநி அருங்காட்சியகம் | Palani Museum

வரலாற்றை சுமந்து நிற்கும் பழநி அருங்காட்சியகம் | Palani Museum
வரலாற்றை சுமந்து நிற்கும் பழநி அருங்காட்சியகம் | Palani Museum


பழநி: ஆன்மிக நகரான பழநியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மட்டுமின்றி நாளைய தலைமுறைக்கு நம் வரலாற்றை சுமந்து நிற்கும் காலப்பெட்டகமாக அரசு அருங்காட்சியகமும் இருந்து வருகிறது.

பழநி மலையடிவாரம் பாத விநாயகர் கோயிலில் இருந்து திருஆவினன்குடி கோயிலுக்குச் செல்லும் சந்நிதி வீதியில் பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான அலுவலகக் கட்டிடத்தில் 1997 முதல் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், நடுகல், நாயக்கர் கால கற்சிலைகள், சங்க காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை வெளியிட்ட இந்திய நாணயங்களின் மாதிரிகள், கலைநயமிக்க மரச் சிற்பங்கள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஓலைச்சுவடிகள், ஓலைச்சுவடிகளை தயார் செய்யும் முறை எழுத்தாணிகளின் வகைகள், முதன்முதலில் தோன்றிய முத்திரை நாணயங்கள், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயங்கள் மற்றும் பழனி என்று பெயர் பொறிக்கப்பட்ட கி.பி.18-ம் நூற்றாண்டின் பழனிக்காசும் வைக்கப்பட்டுள்ளன.

பதினெட்டு சித்தர்களின் புகைப்படங்கள், சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்படும் பல வகை யான தாது உப்புகள், பாஷாணங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. பழநி அருகேயுள்ள மானூர், பச்சளநாயக்கன்பட்டி, ஆமத்தூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள், பெருமாள் மலைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் பல்வேறு உடைந்த ஓடுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்காலச் சிலைகள்.

நீலகிரி மலையில் உள்ள நீலமலைத் தோடர்கள் பயன்படுத்திய சில பொருட்களும் இங்கு உள்ளன. சிக்கிமுக்கிக் கல், நெருப்பு உண்டாக்கும் குச்சி, சித்திர வேலைப்பாடுடைய மரக் கைத்தடி, நேர்த்தியான பூவேலைப் பாடுடைய துணிகளையும், பாறைகள் மற்றும் கனிம வகைகளையும் இங்கு பார்க்கலாம்.

காலை 9.30 முதல் மாலை 5 வரை அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.3, பெரியவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டினருக்கு ரூ.100-ம் வசூலிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு இலவசம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, 2-ம் சனிக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் அருங்காட்சியகத்துக்கு விடுமுறை. தமிழர்களின் நாகரிகம், வரலாறை அறிந்து கொள்ளும் வகையில் குழந்தைகளுடன் பழநிக்கு வருவோர் தவறாமல் சுற்றி பார்க்க வேண்டிய இடம் இந்த அரசு அருங்காட்சியகம்.

அருங்காட்சியக காப்பாட்சியர் ப.குண சேகரன் கூறியதாவது: மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி, விநாடி வினா போட்டிகளும், கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டுகளை படிக்கும் பயிற்சி, தொல்லியல் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். சிறப்புக் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன என்று கூறினார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *