சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்கள், மாநகராட்சிகள் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை தயாரித்து வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.
வருவாய்த் துறை சார்பில், வடகிழக்குப் பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அரசுத்துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள், ராணுவம், விமானப்படை, கப்பல் படை, கடலோரக் காவல் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட மத்திய அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய வருவாய் நிர்வாகஆணையர், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெய்த மழைப்பொழிவு, நீர்நிலைகளின் இருப்பு, வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் மற்றும் பருவ மழையைஎதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை விளக்கினார்.
மேலும், அனைத்து துறை அலுவலர்களும், காவல் துறை மற்றும்முப்படையைச் சேர்ந்த அலுவலர்களும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள, தங்களதுதுறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கினார்.
தொடர்ந்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது: அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, வரும் 30-ம்தேதிக்குள் முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். சென்னை மாநகராட்சி, தெற்கு ரயில்வே நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்துத் துறைகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, மழையை எதிர்கொள்ள உரிய ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளம் ஏற்படும்போது, குடிநீர்க் குழாய்கள் சேதமடையாமல் வலுப்படுத்த வேண்டும். பலவீனமான மற்றும் சேதமடைந்தக் கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை மக்கள் பயன்படுத்தாத வகையில் தடுப்பதுடன், பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்கள், மின்வழித் தடங்களைக் கண்டறிந்து, அவற்றை உடனே மாற்ற வேண்டும். பேரிடர் காலங்களில், தடையில்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
வெள்ளத் தடுப்புப் பணிகளான மழை நீர் வடிகால் மற்றும் பெரும் வடிகால் பணிகள் ஆகியவற்றை அக்.15-ம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். தற்போது தொடங்கப்பட்ட பணிகளில் முக்கியமானவற்றை விரைவாக முடிக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களை மறு ஆய்வு செய்து, தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் பாதிப்புக்குள்ளாகும் மக்களைத் தங்க வைக்கத் தேவையான கட்டிடங்களைக் கண்டறிந்து, தயாராக வைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்கள், மாநகராட்சிகள் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை தயாரித்து வைத்திருக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்படும் பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.