திரிபோலி: புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்தநதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதுகுறித்து கிழக்கு லிபியா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கூறும்போது, “புயல், கனமழை மற்றும் அணைகள் உடைப்பால் இதுவரை 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை’’ என்று தெரிவித்தனர்.
கிழக்கு லிபியாவில் 3 நாள் துக்கம்அனுசரிக்கப்படும் என பிரதமர்ஒசாமா ஹமாத் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளார்.
மேற்கு லிபியாவை ஆட்சி செய்யும் கமாண்டர் கலிபா கூறும்போது, “புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எங்கள் படையை சேர்ந்த வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கி உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன’’ என்றார்.
இதுகுறித்து செஞ்சிலுவை சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாமர் ஜெனீவா நகரில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. இதனால் அந்த நாடு கிழக்கு லிபியா, மேற்கு லிபியா என இரு பகுதிகளாக பிரிந்துள்ளது. உள்நாட்டுப் போரால் லிபியாவில் அடிப்படை கட்டமைப்புகள் மிகவும் மோசமானநிலையில் உள்ளன. இதனால் லிபியாவில் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் சார்பில் கிழக்கு லிபியாவில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.