Last Updated : 27 Jun, 2023 10:23 AM
Published : 27 Jun 2023 10:23 AM
Last Updated : 27 Jun 2023 10:23 AM
நியூயார்க்: லித்தியம்-அயன் பேட்டரியை வடிவமைத்து, தொழில்நுட்ப உலகில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் ஜான் குட்இனஃப். 100 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) காலமானார். கடந்த 2019-ல் வேதியியல் துறையில் நோபல் பரிசை அவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது அன்றாட வாழ்க்கையில் லித்தியம்-அயன் பேட்டரிகள் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தை இயக்கும் சக்தி என்றும் இந்த பேட்டரிகளை சொல்லலாம். நாம் பயன்படுத்தி வரும் மொபைல் போன் தொடங்கி லேப்டாப், ஃபேஸ்மேக்கர், மின் வாகனங்கள் என பலவற்றிலும் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைப்பில்லா அதிநவீன தொழில்நுட்பத்துக்கு இவை வழிவகுத்துள்ளன. பெட்ரோல், நிலக்கரி போன்ற புதை படிம எரிவாயுக்களுக்கு மாற்றான ஆற்றலை இவற்றைக்கொண்டு உருவாக்குகிறோம். அதோடு சுற்றுச் சூழலுக்கு உகந்த சூரிய சக்தியை சேமிக்கவும் கைகொடுக்கிறது.
கடந்த 1991-ல் சந்தையில் பயன்பாட்டுக்கு வந்தது லித்தியம் அயன் பேட்டரிகள். ஆனால், அதற்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேட்டரி உருவாக்கப்பட்டுவிட்டது. அந்த முயற்சியை முதலில் தொடங்கியவர் முனைவர் ஸ்டான்லி விட்டிங்கம். 1970-களின் தொடக்கத்திலேயே இந்த ஆராய்ச்சியில் முனைவர் ஸ்டான்லி விட்டிங்கம் இறங்கினார். முதல்முறையாக செயல்படக்கூடிய லித்தியம் பேட்டரியை வடிவமைத்தவர் இவர்தான்.
அவரைத் தொடர்ந்து முனைவர் குட்இனஃப், லித்தியம் பேட்டரியின் அபரிமிதமான ஆற்றலை மென்மேலும் எப்படி பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்தார். அது பலவகையில் பின்னாளில் கைகொடுத்தது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சுமார் 40 ஆண்டு காலம் பேராசிரியராக அவர் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் டெக்சாஸ் தலைநகர் ஆஸ்டினில் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தை பல்கலைக்கழகம் பகிரவில்லை.
கடந்த 1922-ல் ஜெர்மனியின் ஜெனாவில் பிறந்தவர் ஜான் குட்இனஃப். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் முடித்தவர். மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வு சார்ந்து தனது பணிகளை தொடங்கினார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கனிம வேதியியல் ஆய்வகத்தின் தலைவராக இருந்தபோது தான் லித்தியன்-அயன் பேட்டரி உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டார். 1986-ல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
தவறவிடாதீர்!