
பரத்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் ஜெய்ப்பூர் – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் அந்தரா எனுமிடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்து உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 4.30 மணியளவில் அந்தப் பேருந்து அந்தரா மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதன் மீது பின்னால் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று பலமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள், 5 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு காவல் கண்காணிப்பாளர் மிருதுள் கச்சாவா நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.