ராஜமுந்திரி: திறன் மேம்பாட்டு கழக நிதி முறைகேடு வழக்கில் ராஜமுந்திரி மத்திய சிறையில் உள்ள சந்திரபாபுவை அவரது மனைவி புவனேஸ்வரி சந்தித்துப் பேச அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் திறன் மேம்பாட்டு கழக நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் அவரை சிஐடி போலீஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவ லில் வைக்கப்பட்டுள்ளார்.
ராஜமுந்திரியிலேயே தங்கி உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, நேற்று காலை அவரை காண மத்திய சிறைக்கு சென்றார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. மனைவி என்பவர் ஒரு வாரத்தில் 3 முறை சென்று பார்க்க அனுமதி இருந்தாலும், சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே மறுத்து விட்டார்கள் என புவனேஸ்வரி குற்றம் சாட்டினார்.
ஐடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஐடி துறையில் பணியாற்றி வரும் ஏராளமான ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக தாமாகவே முன் வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, ஹை டெக் சிட்டியில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர், சந்திரபாபு நாயுடுவால்தான் நாங்கள் இன்று ஐடி துறையில் மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகிறோம்.
இத்தனை பேருக்கு வாழ்க்கையை கொடுத்த ஒரு நல்ல மனிதரை பொய் வழக்குகள் போட்டு, அரசியல் காழ்ப்புணர்வுக்காக சிறையில் அடைப்பதா?அவரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும். இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக சந்திரபாபுவை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேபோல், விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக திடீரென கல்லூரிகள் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று விடுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்களை போலீஸார் காலி செய்து வீடுகளுக்கு அனுப்பிவிட்டனர். மேலும், கல்லூரி முன் சந்திரபாபுவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினால், வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் மாணவர்களை போலீஸார் எச்சரித்துள்ளனர்.