பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு செல்வதாகவும், அங்கு அவர் அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபர் கிம் வட கொரியாவின் வட கிழக்குப் பகுதிக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றதாகவும், அங்கிருந்து அவர் ரஷ்யாவுக்குச் செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை காலை கிம் ஜோங் – புதின் சந்திப்பு நடைபெறவிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து வட கொரிய ஊடகம் ஏதும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் கிம் ஜோங் ரஷ்யா வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல், தென் கொரிய ஊடகங்களும் கிம் ரஷ்யா புறப்பட்டுச் சென்றுவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் கிம்மின் ரஷ்யப் பயணத்தை வட கொரியா உறுதி செய்தால் அவர் வெளிநாட்டுக்குச் செல்வது 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவே முதன் முறையாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த வட கொரிய தேசிய விழாவில் ரஷ்ய, சீன அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது நினைவுகூரத்தக்கது. சீனாதான் வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. இந்நாட்டில் இருந்து மீன் வகைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கெடுபிடிகளை தளர்த்திக் கொண்ட வட கொரியா: 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் கடும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. ஏறக்குறைய ஓராண்டு காலம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்குள்ளானது. கரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில் வட கொரிய அரசு தனது நாட்டின் எல்லைப் பகுதிகளை அடைத்தது. வெளிநாடுகளில் இருந்த தனது சொந்த குடிமக்கள் கூட மீண்டும் வட கொரியாவுக்குள் அனுமதிக்கவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்தது.
இந்த நிலையில், தற்போது இந்தக் கட்டுப்பாட்டை வட கொரிய அரசு தளர்த்துகிறது. வட கொரியாவின் அவசர தொற்றுநோய் தடுப்பு தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் குறைந்துவிட்டதால் வெளிநாட்டில் உள்ள வடகொரிய குடிமக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்ப அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பது கவனம் பெற்றுள்ளது.