
சென்னை: இந்தியாவில் நோக்கியா 110 4ஜி (2023) மற்றும் நோக்கியா 110 2ஜி (2023) என இரண்டு ஃப்யூச்சர் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் யுபிஐ மூலம் பயனர்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 2ஜி போன்களை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
இந்த போனில் இடம் பெற்றுள்ள யுபிஐ பேமெண்ட் அம்சம் தான் மற்ற ஃப்யூச்சர் ரக போன்களில் இருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது. நிச்சயம் ஃப்யூச்சர் போன் பயனர்கள் டிஜிட்டல் முறை பண பரிமாற்றத்திற்கு இது அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் நோக்கியா ஃப்யூச்சர் போன்களின் செயல்பாட்டில் உள்ள நம்பிக்கை அதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்: பில்ட்-இன் ரியர் கேமரா, ஆட்டோ கால் ரெக்கார்டிங், மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், காம்பேக்ட் டிசைன், வயர்லெஸ் எஃப்.எம், இன்டர்நெட் அக்சஸ், 1.8 இன்ச் டிஸ்பிளே, 1450mAh பேட்டரி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் யுபிஐ பேமெண்ட் வசதியை இந்த போன் உள்ளடக்கி உள்ளது. நோக்கியா 110 4ஜி போன் ரூ.2,499 மற்றும் நோக்கியா 110 2ஜி போன் ரூ.1,699-க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.