
ரபாட்: வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது.
மொராக்கோவின் சுற்றுலா தலமான மாரகேஷ் பகுதியில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், பூகம்பம் சரியாக வெள்ளி இரவு 11.11 மணிக்கு நடந்துள்ளது.
இது தொடர்பாக செய்தி ஊடகங்களுக்கு மாரகேஷை சேர்ந்த அப்தெல்ஹக் எல் அம்ரானி அளித்தப் பேட்டியில், “திடீரென கட்டிடம் பயங்கரமாகக் குலுங்கியது. நான் பூகம்பம் ஏற்பட்டுள்ளதை புரிந்து கொண்டேன். வெளியில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிர்ச்சியில் நான் இருந்த கட்டிடத்திலிருந்து வெளியில் ஓடிவந்தேன். நிறைய பேர் என்னைப் போல் ஓடிவந்து சாலையில் தஞ்சம் புகுந்தனர். 10 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொலைபேசிகள் ஏதும் வேலை செய்யவில்லை. பின்னர் தொலைபேசி பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தாலும் நாங்கள் அனைவருமே சாலையிலேயே இருப்பது என உறுதி செய்தோம்” என்றார்.
மாரகேஷில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிரதமர் மோடி இரங்கல்: இதற்கிடையில், மொராக்கோ பூகம்பம் பற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், “மொராக்கோ பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மிகுந்த வேதனை தருகின்றது. இந்தத் துயர்மிகு தருணத்தில் மொராக்கோ மக்களுடன் எனது எண்ணங்கள் நிற்கின்றன. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெறட்டும். மொராக்கோவின் இந்தத் துயரமான தருணத்தில் இந்தியா அனைத்துவித உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜி20 உச்சி மாநாட்டின் துவக்கத்தின்போதும் பிரதமர் மொரோக்கோ பூகம்பத்தைக் குறிப்பிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.