காசாபிளாங்கா: வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோவின் சுற்றுலா நகரமான மாரகேஷ் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர்அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மாரகேஷ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் உட்பட கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர்.
முதல் நாள் கணக்கெடுப்பின்போது 1,037 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.இதையடுத்து நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.
அதே போல் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு அருகில் உள்ளமருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிகபட்சமாக அல்-ஹவுஸ் மாகாணத்தில் 1,293 பேரும், டரவ்டான்ட் பகுதியில் 452 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,059 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 1,404 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
மாரகேஷ் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. பல கட்டிடங்கள், கடுமையான விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாரகேஷ் நகரம் சுற்றுலா நகரம் என்பதால் இங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மொராக்கோ நாட்டை இந்த நிலநடுக்கம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வட ஆப்பிரிக்காவில் கடந்த 120 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ல்மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மொராக்கோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொராக்கோவில் ஏற்பட்ட சேதத்தை சீர் செய்ய பல ஆண்டுகளாகும் என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேபோல் தலைநகரம் ரபாத், முக்கிய நகரங்களான காசாபிளாங்கா, எஸ்ஸாஅவுரா பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.