பெங்களூரு: மேகேதாட்டு அணைஇ விவகாரத்தில் தமிழகம் ‘தேவையற்ற தொல்லைகளை’ தருகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “மேகேதாட்டு அணை திட்டத்தை தமிழகம் எதிர்ப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. அது எங்களின் பகுதி. எங்கள் பகுதியில் நாங்கள் அணை கட்டுகிறோம். இதில் தமிழகம் தேவையற்ற தொல்லைகளை தருகிறது. தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது. சாதாரண ஆண்டுகளில் அந்த அளவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இக்கட்டான நேரத்தில், பேரிடர் ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும். ஆனால் தமிழகம் தேவையில்லாமல் சிக்கலை உருவாக்குகிறது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தும் மத்திய பாஜக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி வழங்குமாறு மத்திய அரசு கூறவேண்டும். ஏனென்றால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக பாஜக தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் அரசியல் செய்யமாட்டோம் என்றார்கள். ஆனால், அணைக்கு அனுமதி கொடுக்காமல் அரசியல் செய்கிறார்கள்.
பாஜக கூறுவது போல, கர்நாடக அரசு மகிழ்ச்சியுடன் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் காரணமாகவே தண்ணீர் திறக்கிறது. மாநில விவசாயிகளின் நலன் மற்றும் மைசூரு, பெங்களூரு மற்றும் பல மாவட்டங்களின் குடிநீர்த் தேவைகளைப் பாதுகாப்பதும் அரசின் கடமை. அதற்காகவும்தான் தண்ணீர் திறக்கிறோம். மாநில அரசைப் பொறுத்தவரை, நீர் கொள்கையில், குடிநீருக்கு முதல் முன்னுரிமை.
அதேநேரம், பயிர்களைப் பாதுகாக்க தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஆணையம் கூறியதால் அரசு அதை செய்தது. திமுக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. செப்டம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. அப்போது அரசு உண்மை நிலையை எடுத்துரைக்கும். முன்னதாக, இன்று (செப்டம்பர் 12) நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் அரசு தனது நிலைப்பாட்டை முன்வைக்கும். எனது அரசாங்கம் இந்த விவகாரத்தில் அரசியலுக்கும் விலைபோகாது. மேலும் மாநில விவசாயிகளின் நலனில் சமரசம் செய்யாது.
ஆகஸ்ட் இறுதி வரை தமிழகத்துக்கு 86 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும். ஆனால் அதில் பாதிகூட நாங்கள் விடுவிக்கவில்லை.” இவ்வாறு தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்று வாரிய கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.