
சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வர்த்தகப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றியவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது வீட்டுக்கு மும்முனை மின் இணைப்பு வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
2 ஆண்டுகள் சிறை: இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், மின் வாரிய அதிகாரி ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2016-ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், உதவிப் பொறியாளருக்காகத்தான் அந்தப் பணத்தைப் பெற்றதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, குற்றம் சாட்டப்பட்ட மின்வாரிய அதிகாரி ராஜேந்திரனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.