Health

முதுமையில் புற்றுநோய் எனும் மாபெரும் சவால்

முதுமையில் புற்றுநோய் எனும் மாபெரும் சவால்


உடல் ஆரோக்கியம் பேண வேண்டிய வயதில் குடும்பத்தினருக்காகவும், சமூக கடமைகளுக்காவும் ஓடி ஓடி உழைத்து சரியான உணவு, உறக்கம் இன்றி, இளமை கடந்து முதுமையை அடைந்த பின், ஆரோக்கியம் என்பது கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் போல் ஆகிவிடுகிறது.

முதுமையில் தொற்றா நோய்க்கூட்டத்தில் இதய நோய்களுக்கு அடுத்தாற் போல் அதிக இறப்புகளை உண்டாக்கும் நோய்நிலையாக இருப்பது புற்றுநோய் தான். வயது மூப்பில் மாபெரும் சவாலாக இருக்கக்கூடிய நோய்நிலைகளில் முதல் இடத்தைப் பிடிப்பது புற்றுநோய். ஏனெனில் புற்றுநோய் என்றாலே ஒரு பயமும், பதட்டமும் முதுமைக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான்.

புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் தடுக்கப்படவேண்டிய ஒன்று. மீறி உண்டாகிவிட்டால் எண்ணி எண்ணி வருத்தம் கொள்வதில் எந்த பலனும் இல்லை என்பதை முதுமையை நோக்கி பயணிக்கும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அத்தகைய புற்றுநோயை சரி செய்து விடமுடியுமா? என்பது ஒரு புறமிருக்க, அது எந்த இடத்தில் உள்ளது? எந்த நிலையில் உள்ளது? பரவியுள்ளதா, இல்லையா? என்று அனுதினமும் எண்ணி எண்ணி அதிலே முதுமையின் ஆயுள் சுருங்கி விடும். வாழ்க்கைத் தரம் குறைந்து விடும். கிட்டத்தட்ட 60 சதவீதம் அளவுக்கு புற்றுநோயானது 65 வயதில் தான் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முதுமைப் பருவத்தில் புற்றுநோயை தடுப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். ஏனெனில் முதுமையில் உண்டாகும் பல்வேறு உடல் செல்களின் மாற்றங்கள் பல்வேறு நோய்நிலைகளுக்கு பாதை அமைத்து விடுகிறது. இதில் புற்றுநோய் ஒன்றும் விதிவிலக்கல்ல.

முதுமை நிலையில் அத்தகைய புற்றுநோய் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிகம் உண்டாவதாக உள்ளது. ஆண்களின் புகைப்பிடிக்கும் பழக்கமும், குடிப்பழக்கமும், ஆரோக்கியமில்லாத வாழ்வியலும், உணவுப் பழக்கமும் புற்றுநோய் விகிதத்தை அதிகமாக்கும் காரணிகளாக உள்ளன.

புகையிலையில் உள்ள 70-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உடல் செல்களை சிதைத்து புற்றுநோய்க்கான கதவுகளை திறந்து விடுகின்றன. இந்தியாவில் அறுபது வயதில் ஆண்களில் கிட்டத்தட்ட 45-50 சதவீதம் பேருக்கும், பெண்களில் 35-41 சதவீதம் பேருக்கும் புற்றுநோய் உண்டாவதாக புள்ளி விவரங்கள் கூறுவது முதுமைக்கு அச்சமும், சவாலும் உண்டாக்குவதாக உள்ளது.

முதுமையில் பல்வேறு இடங்களில் புற்றுநோய் உண்டாவதாக உள்ளது. கல்லீரல், கணையம், மூளை, பித்தப்பை, கருப்பை, கருவாய், மார்பகம், உணவுக்குழல், பெருங்குடல், இரைப்பை, சிறுநீரகம் ஆகியன புற்றுநோய் உண்டாகும் முக்கிய இடங்களாக உள்ளன.

முதுமையில் ஆண்களுக்கு புரோஸ்டேட் கோள புற்றுநோயும், பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயும், மார்பக புற்றுநோயும் அதிகம் ஏற்படுவதாக உள்ளன. ஆக அறுபதைக் கடக்கும் ஆண்களும், பெண்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.

சோ. தில்லைவாணன்

முதுமையில் பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் மாற்றம், அத்துடன் ரத்தக் கசிவு, நாட்பட்ட ஆறாத புண்கள், நாட்பட்ட கட்டிகள், அடிக்கடி சுரம், நிணநீர் கோளங்களில் வீக்கம் ஆகிய குறிகுணங்கள் தென்பட்டால் எவ்வித தாமதமின்றி உடனே மருத்துவரை அணுகுவது மிக மிக அவசியமான ஒன்று.

சித்த மருத்துவ அடிப்படையின் படி, நோய்க்கு காரணமாகும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களும் கேடடைந்து புற்றுநோய் உருவெடுக்கிறது. இருப்பினும் கபம் மற்றும் வாதம் ஆகிய குற்றங்களின் பாதிப்பு புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

“பித்தம் அடங்கிடின் பேசாதே போய் விடு” என்பது திருமூலர் வாக்கு. அதாவது பித்தம் அடங்கிவிட்டால் உயிர் போய்விடும் என்பது பொருள். அத்தகைய பித்தம் குறையாமலும், கபம் கூடாமலும் பார்த்துக்கொள்வது புற்றுநோய் நிலையில் ஆயுளை அதிகரிக்க உதவும்.

சித்த மருத்துவ மூலிகைகளான சீந்தில், மஞ்சள், நிலவேம்பு, வில்வம், நித்யகல்யாணி, சேராங்கொட்டை, கொடிவேலி, அமுக்கரா கிழங்கு, திரிபலை, தாளிசபத்திரி, கீழாநெல்லி, கரிசாலை ஆகிய பல எளிய மூலிகைகளும், அவை சேர்ந்த சித்த மருந்துகளும் புற்றுநோய் நிலையில் நல்ல பலன் தருவதாக உள்ளன. இவற்றை புற்றுநோயின் தன்மை மற்றும் நிலைகளுக்கு தகுந்தாற் போலும், நவீன சிகிச்சை முறைகள் எடுத்துக்கொண்டால் அதற்கு தகுந்தாற் போலும் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது ஆயுட்காலத்தைக் கூட்ட உதவும்.

உதாரணமாக நித்யகல்யாணி இலையில் உள்ள ‘வின்கிரிஸ்டின், வின்ப்ளாஸ்டின்’ ஆகிய இயற்கை வேதிப்பொருட்கள் நவீன அறிவியல் உலகில் பிரித்தெடுக்கப்பட்டு புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப் படுகிறது. அதே போல் சித்த மருத்துவ மூலிகையான தாளிசபத்திரியின் செயல் மூலக்கூறான ‘பிக்லிடாக்சால்’ நுரையீரல் புற்றுநோய் நிலையில் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவை புற்றுநோய் சிகிச்சையில் நமது பாரம்பரிய மூலிகைகளின் மருத்துவப் பயனை பறை சாற்றும் விதமாக உள்ளன.

மேலும் கட்டிகளைக் கரைக்கும் ரசாயன மருந்துகள் என்று சித்த மருத்துவம் பட்டியலிடும் மருந்துகள் பல. அத்தகைய தாது கலப்புள்ள மெழுகு மற்றும் பற்ப, செந்தூர, பாஷாண பெரு மருந்துகளும் புற்றுநோய் கட்டிகளில் உதவக்கூடியதாக இருப்பது முதுமையில் புற்றுநோயை எதிர்கொள்ள சித்த மருத்துவம் தரும் நம்பிக்கை.

இவ்வாறாக தற்கால புற்றுநோய்க்கான மருத்துவத்தில் சித்த மருத்துவ மூலிகைகளின் செயல்தன்மை மிக்க வேதி மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. உலக அரங்கில் சவாலாக இருக்கும் தொற்றா நோய்நிலையான புற்றுநோய்க்கு சித்த மருத்துவம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெடுத்த மூலிகைகள் நன்மை தருவதாக இருப்பது சிறப்பு மிக்கது. எனவே அத்தகைய மூலிகைகளை இயற்கையாய் பயன்படுத்த துவங்குவது புற்றுநோயின் பல்வேறு நிலைகளில் ஆயுளைக் கூட்ட உதவும்.

புற்றுநோய் நிலையில் பலன் தரும் சித்த மருந்துகள் ஒரு புறமிருக்க, புற்றுநோய்க்காக நவீன மருத்துவ கீமோ சிகிச்சை மேற்கொள்ளும் நிலையில் அதன் பல்வேறு பின்விளைவுகளை சமாளிக்க சித்த மருந்துகளை பயன்படுத்துவதும் நற்பலன் தரும்.

கீமோ சிகிச்சையின் போது பொதுவாக உண்டாகும் பின்விளைவுகளான முடி கொட்டுதல், நோய் எதிர்ப்புத்தன்மை குறைதல், எலும்பு மஜ்ஜை பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகிய நிலைகளில் நெல்லிக்காய் லேகியம், வெண்பூசணி லேகியம், அஸ்வகந்தா லேகியம், சீந்தில் மாத்திரை, மாதுளை மணப்பாகு, திரிபலை கற்பம், கரி சாலை கற்பம் போன்ற மருந்துகள் பலன் அளிக்கக் கூடியதால் முதுமையில் அவற்றை தயக்கமின்றி பயன்படுத்துவது, சோர்ந்த உடலுக்கு பலம் தரும்.

முதுமையில் சிறந்த உணவுப் பழக்கம் என்பது பல்வேறு நோய்களை தடுக்க உதவும் பேராயுதம். எளிமையான ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் பல்வேறு நோய்களை தடுக்க முடியும். நார்ச்சத்துள்ள உணவு வகைகள் அதில் முக்கிய பங்காற்றுகின்றன. பழங்களும், பிஞ்சு காய்கறிகளும் அத்தகைய நார்சத்துக்களின் முதன்மை ஆதாரம். சிறுதானிய உணவுகளும் அதிக நார்சத்தினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பழங்களும், காய்கறிகளும் அதிகம் உட்கொள்வது பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோயினை தடுப்பதாகவும், மாறாக பழங்களை மட்டும் உட்கொள்வது ஆண்களின் புராஸ்டேட் புற்றுநோயினை தடுப்பதாகவும் உள்ளதென ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுவது சிறப்பு. அதே போல் மீன் உணவுகளை அதிகம் உட்கொள்வதும், குறைந்த அளவு இறைச்சி உணவுகளை உட்கொள்வதும் பெருங்குடல் புற்றுநோய்க்கான ஆபத்தினைக் குறைப்பதாக உள்ளதாக தெரிவிக்கின்றன. ஆகவே முதுமையில் உணவு பழக்கமும், உணவு ஒழுக்கமும் கடைப்பிடிப்பது மிக அவசியம்.

சமீபத்திய ஆய்வுகளின் படி நடைபயிற்சி செய்வது புற்றுநோய் நிலையில் ஆயுட்காலத்தினை அதிகரிக்க உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. வாரத்திற்கு 3 மணி நேரம் நடைப்பயிற்சி பழகி வருவது மார்பக புற்றுநோயாளிகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாகவும், வாரத்திற்கு 6 மணி நேரம் நடைப்பயிற்சி பழகி வருவது பெருங்குடல் புற்றுநோயாளிகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாகவும் உள்ளதை ஆய்வுகள் உறுதிபட கூறுகின்றன. நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி பழகுவதன் மூலம் மூளை புற்றுக்கட்டி நோயாளிகள் இறப்பு விகிதம் குறைவதையும் ஆய்வுகள் உறுதி செய்வது கூடுதல் சிறப்பு. எனவே சிரமம் பார்க்காமல் நடைப்பயிற்சி மேற்கொள்வது முதுமையில் அவசரமான அவசியம்.

மரபு சார்ந்தும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், நோயுடன் தொடர்புடைய குடும்ப வரலாறு இருப்பவர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை அளித்து நோயில் இருந்து காப்பாற்ற முடியும்.

புற்றுநோயின் முற்றிய நிலையில் ஆயுட்காலம் என்பது சில மாதங்கள் முதல் ஒரு சில வருடங்கள் வரை தான் என்பது வெளிப்படை. அவ்வாறு இருக்கையில் முதுமையில் ஆறுதலோடு வாழ்க்கையை நகர்த்த வேண்டியது அவசியம். ஆகவே ஒருங்கிணைந்த கைகளோடு, ஒருங்கிணைந்த மருத்துவத்தை கொண்டு, முதுமையை பாதுகாக்க வேண்டியது சமூக பொறுப்பு.

முதுமையில் நம்மால் பிறருக்கு துன்பம் வேண்டாம் என்ற எண்ணத்தால் மனம் நொந்து, மருந்து மாத்திரைகளை கைவிட்டு, நம்பிக்கை இழப்பது ஏற்க முடியாத ஒன்று. நல்ல நடைப்பயிற்சியும், ஆரோக்கியமான உணவும், நேரம் தவறாமல் மருந்துகளும், ஒருங்கிணைந்த மருத்துவமும், மனம் தளராமல் இருக்க யோகாசனமும், தியானமும், முகம் சுழிக்காத அன்பும் அரவணைப்பும் இருந்தால் முதுமையில் புற்றுநோயை மட்டுமல்ல, எமனையும் வெல்ல முடியும்.

தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.comSource link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *