State

முதல்வர் ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு; 30 லட்சம் வேலைவாய்ப்பு: அரசு | CM Stalin 33-month rule attracted Rs 8.65 lakh crore investments; 30 lakh jobs: TN Govt

முதல்வர் ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு; 30 லட்சம் வேலைவாய்ப்பு: அரசு | CM Stalin 33-month rule attracted Rs 8.65 lakh crore investments; 30 lakh jobs: TN Govt


சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய 33 மாத ஆட்சிக் காலத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூபாய் 8.65 லட்சம் கோடி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அதன் மூலம் ஏறத்தாழ 30 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த முதல்வர் கருணாநிதி சென்னையில் வள்ளுவர் கோட்டம், தருமபுரியில் அதியமான் கோட்டம் எனத் தமிழ் வளர்க்கும் கோட்டங்களை அமைத்தார்கள். அதுபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021-ல் பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்துத் தமிழகத்தில் தொழிற்சாலைகளைப் புதிது புதிதாக அமைத்துத் தமிழகத்தை ஒரு தொழில் கோட்டமாக உருவாக்கிடும் முயற்சியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்.

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழகத்தை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து முதல்வர் ஸ்டாலின் அரசு முனைப்புடன் செயல்படுகிறது.அதன் முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்எப்போதும் இல்லாத அளவாக, 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின்மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான்காம் கட்டமாக 27-1-2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டுக்குச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன்வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார். அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவுக்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு குறித்தும், தமிழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு பாராட்டியது.‘ஆண்டுவாரி முதலீட்டாளர்கள் சந்திப்பு 2022 நடைபெற்றபோது ஆசிய-ஒசியான மண்டலத்துக்கான சிறந்த முதலீட்டு நிறுவனத்துக்குரிய விருது தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

புதிய தொழில் முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்கள் செய்துள்ள நிலையில் தமிழகத்தைப் பெரிய அளவில் தொழில்மயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவில் நில வங்கி உருவாக்கப்படுகிறது. இதற்காக, சிப்காட் நிறுவனம் ஏறத்தாழ 33,489 ஏக்கர் நிலம் தெரிவு செய்துள்ளது. இதில், 22,941 ஏக்கர் நிலம் அரசின் நிருவாக அனுமதி பெற்று கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படித் தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன், ஒப்பந்தங்கள் தொழில் நிறுவனங்களாக உருப்பெறத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக முதல்வர் தொழில் துறை அமைச்சரின் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழுவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்பு உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய 33 மாத ஆட்சிக் காலத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூபாய் 8.65 லட்சம் கோடி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அதன் மூலம் ஏறத்தாழ 30 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தமிழக முதல்வருடைய ஆட்சிக்காலம் ஒரு மாபெரும் தொழிற் புரட்சிக்கான அடித்தளம் என்பதை வெளிப்படுத்துகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் முதலீட்டினைக் கொண்டு வருவேன் என்று கூறியதற்கு இதுநாள்வரை வரைவு அறிக்கை எதுவும் வெளியிடாதது ஏன்?” என்றும் அவர் வினவியிருந்தார். அதன் விவரம்: “திமுக ஆட்சிக்குவந்த 32 மாதங்களில் ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை” – இபிஎஸ்

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *