சென்னை: ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்யுடன் இணைய இருப்பதை இயக்குநர் அட்லீ உறுதி செய்துள்ளார்.
ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. வெளியான ஆறு நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. இந்தி படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பாலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் புத்துணர்வை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மும்பையில் திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் இயக்குநர் அட்லீ ‘ஜவான்’ திரைப்படத்தை பார்த்தார். படம் முடிந்த வெளியே வந்த அவரிடம் ‘இந்தி ரசிகர்கள் விஜய்யை மிகவும் மிஸ் செய்கின்றனர்.. அவருடன் மீண்டும் இணைவீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அட்லீ, ‘நாங்கள் இதுகுறித்த ஒரு புதிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என்று கூறினார்.
விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை அட்லீ இயக்கியுள்ளது. இந்த மூன்று படங்களுமே வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ‘தெறி’ படத்தை வருண் தவானை வைத்து அட்லீ இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை அட்லீ இயக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.