
ரபாட்: வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. இதுவரை 1,037 பேருக்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 1200+ பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது.
மொராக்கோவின் சுற்றுலா தலமான மாரகேஷ் பகுதியில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், பூகம்பம் சரியாக வெள்ளி இரவு 11.11 மணிக்கு நடந்துள்ளது.
அடுத்த 48-72 மணிநேரம் முக்கியமானது: அடுத்த 48-72 மணிநேரம் தேடுதல் மற்றும் மீட்புக்கு முக்கியமானது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. “அடுத்த 48-72 மணிநேரம் முயற்சிகள் சிக்கலானதாக இருக்கும். மக்கள் உறங்கிக் கொண்டிருந்த இரவு நேரத்தில் பூகம்பம் நிகழ்ந்துள்ளது. எனவே காலைதான் நிலநடுக்கத்தின் தாக்கம் வெளிவருவதை பார்த்தோம்” என்று அல் ஜசீராவுக்கு அளித்துள்ள பேட்டியில் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மரக்கேஷ் கட்டிடங்கள் சேதம்: இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மொராக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மராகேஷ் பெரும் சேதமடைந்துள்ளது.
12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மராகேஷின் புகழ்பெற்ற கௌடோபியா மசூதியும் சேதமடைந்தது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பழைய நகரத்தைச் சுற்றிலும் சேதமடைந்ததை காட்டும் வீடியோக்களையும் மொராக்கோ மக்கள் வெளியிட்டனர்.
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை தகுதிச் சுற்று ஒத்திவைப்பு: நிலநடுக்கம் காரணமாக மொராக்கோவில் ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை தகுதிச் சுற்று ஒத்திவைக்கப்பட்டது. மொராக்கோ நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள அகாடிரில் மொராக்கோ லைபீரியா அணியுடன் விளையாட திட்டமிடப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி இரங்கல்: இதற்கிடையில், மொராக்கோ பூகம்பம் பற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், “மொராக்கோ பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மிகுந்த வேதனை தருகின்றது. இந்தத் துயர்மிகு தருணத்தில் மொராக்கோ மக்களுடன் எனது எண்ணங்கள் நிற்கின்றன. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெறட்டும். மொராக்கோவின் இந்தத் துயரமான தருணத்தில் இந்தியா அனைத்துவித உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜி20 உச்சி மாநாட்டின் துவக்கத்தின்போதும் பிரதமர் மொரோக்கோ பூகம்பத்தைக் குறிப்பிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.