Cinema

மார்க் ஆண்டனி: திரை விமர்சனம்  | Mark Antony movie Review

மார்க் ஆண்டனி: திரை விமர்சனம்  | Mark Antony movie Review
மார்க் ஆண்டனி: திரை விமர்சனம்  | Mark Antony movie Review


மெக்கானிக்கான மார்க்கிற்கு (விஷால்), இறந்துவிட்ட தன் தந்தை ஆண்டனி (விஷால்) மீது வெறுப்பு. மோசமான டானான அவர்தான், தன் அம்மாவைக் கொன்றார் என்று நம்புகிறார். இப்போது மற்றொரு டானும் ஆண்டனியின் நண்பருமான ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா), வளர்த்து வருகிறார் மார்க்கை. ஜாக்கி பாண்டியன் மகன் மதன் பாண்டியனும் (எஸ்.ஜே.சூர்யா) மார்க்கும் நண்பர்கள். கொடூர டான் மகன் என்பதால், மார்க்கின் காதல் திருமணம் நின்றுவிடுகிறது. கடுப்பான மார்க்கிற்கு கடந்த காலத்துக்குப் பேசும் ஃபோன் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் கடந்த காலத்துக்கு போன் செய்து, தனது அப்பா, அம்மா (அபிராமி) ஆகியோரிடம் பேசுகிறார். அப்போது அவருக்குக் கிடைக்கும் உண்மைகள் என்ன, தனது தந்தை யார், ஜாக்கி பாண்டியன் யார் என்பது கதை.

டைம் டிராவல் பின்னணியில் ஒரு ஆக்‌ஷன் கதையை அதிக மசாலாவோடு தந்திருக்கிறார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு தொலைபேசியின் மூலம் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்தின் எந்த தொலைபேசி எண்ணுக்கும் பேசலாம் என்கிற ஐடியா புதிதாக இருக்கிறது. அதன் மூலம் 1995-ல் வாழும் 2 இளைஞர்கள் 1975-ல் வாழ்ந்த தங்கள் அப்பாக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி, நிகழ்கால வாழ்வை மாற்றுவதற்கான போட்டிதான் கதைக்களம். இந்தக் கற்பனைக்குள் பல சுவாரசிய ஐடியாக்களை சுகமாகப் புகுத்தி ரணகளமாய் அதகளம் செய்திருக்கிறார்கள்.

எந்த லாஜிக்குமின்றி, மூளையைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தால் படம் வேகமாக அழைத்துச் சென்று கிளை மாக்ஸில் கொண்டு வந்து ‘ஓகேவா?’ என்று ஜாலியாக நிறுத்தி விடுகிறது. 1975ல் நடக்கும் கதையில் சில்க் எப்படி வந்தார்?, நீங்க சொன்ன விதியையே டைம் டிராவல் ஃபோனில் மீறுவது ஏன்? என்பது போன்று கேட்க ஆயிரம் இருந்தாலும் அதை மறக்கடிக்க வைத்துவிடுவது, ஜாலி கேலி காட்சிகளின் பலம்.

கடந்த சில வருடங்களாக பான் இந்தியா திரைப்படங்களில் ஆக்‌ஷன் இயக்குநர்களின் உழைப்பு கடுமையாகவே இருக்கிறது. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. நினைத்த நேரமெல்லாம் ஐம்பது பேர், அதற்காகவே பிறந்தோம் என்பதுபோல, துப்பாக்கியால் சுடப்பட்டுச் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்பாவி மெக்கானிக் மார்க், அடிதடி அப்பா டான் என இரண்டு கேரக்டர்களில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் விஷால். அப்பாவியை விட அப்பாவே நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் அதிகமாக. கிளைமாக்ஸில் வரும் அந்த மொட்டை கெட்டப், அம்சம்.

விஷால்தான் ஹீரோ என்றாலும் படத்தைத் தாங்கி நிற்பது ஜாக்கி பாண்டியனும் மதன் பாண்டியனும்தான். அதாவது, எஸ்.ஜே.சூர்யாக்களே! கடந்த காலத்துக்கு போன் செய்து அப்பாவுடன் மகன் பேசும் காட்சிகளில் தெறிக்கிறது தியேட்டர். அதோடு சில்க் ஸ்மிதாவைச் சந்திக்கும் காட்சியில் ‘அடியே மனம் நில்லுன்னா’ பாடலுக்கு அவர் ஆடும் டான்ஸ், ஆத்தாடி என்னா ஆட்டம்! படம் முழுக்க ஆயுதங்கள், குண்டுகளின் சத்தம் காதைக் கிழிக்கிறது. இது போதாதென்று கேரக்டர்களும் கத்தியே பேசிக்கொண்டிருப்பது காது ஜவ்வை இரக்கமின்றி பதம் பார்க்கிறது.

தந்தை விஷாலின் மனைவி அபிநயா, மகன் விஷாலின் காதலி ரிது வர்மா இருவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். ஒய்.ஜி.மகேந்திரா, ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். விசித்திர விஞ்ஞானி சிரஞ்சீவியாக செல்வராகவன், சிறிய வேடம் என்றாலும் கவனம் ஈர்க்கிறார். சுனில் ஆர்ப்பாட்டமாக வந்து கூட்டத்தில் ஒருவராகக் கரைந்து போகிறார்.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களில் தியேட்டரில் கொண்டாட்டம். மாஸ் காட்சிகளில் பின்னணி இசை பெரும் பலம் என்றாலும் பல இடங்களில் இரைச்சல். அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு. படத்துக்குத் தேவையான ரெட்ரோ உணர்வைக் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறது. 1995-க்கும் 1975-க்கும் மாற்றி மாற்றிப் பயணிக்கும் திரைக்கதையைக் குழப்பமில்லாமல் கடத்தும் சவாலில் விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங் வென்றிருக்கிறது. மொத்தப் படமும் ‘செட்’டில்தான் என்பதால் ஆர்.கே.விஜய் முருகனின் கலை இயக்கம் அபாரம். நிறையக் குறைகள் இருந்தாலும் இந்த ‘மார்க் ஆண்டனி’ தருகிறான், கலகலப்பு கேரண்டி.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *