மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இரண்டாவது முறையாக, சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது.
தமிழகத்தில் இரண்டாவது முறையாக சுற்றுலாத் துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாவை தொடங்கி வைத்தார்.
ஆக. 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பட்டம் விடும் திருவிழா, தினமும் மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறு கிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டவர்கள் பட்டங்களை பறக்க விட்டனர்.
இந்த விழாவில் பல்வேறு வடிவங்களில் எண்ணற்ற வண்ணங்களில் 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய தேசியக் கொடி, ஆமை, டால்பின், மிக்கி மவுஸ், கிறிஸ்துமஸ் தாத்தா, சுறா மீன், டிராகன், பாம்பு உள்ளிட்ட வடிவங்களில் பட்டங்கள் பறக்க விடப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் என1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை 6 மணி வரை நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக பட்டங்கள் பாதியிலேயே இறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு சர்வதேச பட்டம்விடும் திருவிழாவில் கலந்துகொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். மேலும், விவரங்களுக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவு சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் பாரதிதேவி, காஞ்சி எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.