உதகை: ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது, ஐரோப்பிய நாடுகளில் நிலவக்கூடிய குளிரான காலநிலை போன்ற சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் நீலகிரி மாவட்டத்தில் குடியேறினர்.
ஐரோப்பிய பாணியில் கட்டிடங்கள் பல கட்டப்பட்டன. குறிப்பாக, உதகை அரசு கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க பழமையான கட்டிடங்களாகும். இவை முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நகர (பி1) காவல் நிலையம். இந்த காவல் நிலையமும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. தென்னிந்தியாவில் 1921-ம் ஆண்டு மாப்ளா கிளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக, நீலகிரி மாவட்ட எல்லையிலுள்ள கேரளா மாநிலம் எரநாடு, வள்ளவநாடு மாவட்டங்களில் கலவரங்கள் தீவிரமாகின.
கலவரக்காரர்கள் ஆங்கிலேய அரசு கட்டிடங்கள், கருவூலம் மற்றும் காவல்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர். 1921-ம் ஆண்டின் பிற்பகுதியில் பரவிய கிளர்ச்சியில், கலவரக்காரர்களால் நீலகிரி காவல் துறையை சேர்ந்த ஆய்வாளர் சி.என்.சேஷகிரி ராவ், உதவி ஆய்வாளர் எம்.ஷேக் மொய்தீன் சாயிபு, காவலர்கள் ஈசரண் நாயர், குட்டி கிருஷ்ணன் நாயர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
கிளர்ச்சியை கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு மலபார் சிறப்பு காவல் படையை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆங்கிலேய ராணுவம் மூலமாக பயிற்சி அளித்தது. இந்த சிறப்பு காவலர்கள் கிளர்ச்சியை கட்டுப்படுத்தினர். இந்நிலையில், கிளர்ச்சியில் உயிரிழந்த நீலகிரி போலீஸாரின் நினைவாக உதகை பி-1 காவல் நிலையத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்த கல்வெட்டு இன்றும் காவல்நிலையத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்த கட்டிடம் மிகவும் பழமையானதால், இதனை இடித்துவிட்டு மாவட்ட காவல்துறை அலுவலகம் கட்ட, 10 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பாரம்பரியமான இந்த கட்டிடத்தை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனால், இந்த கட்டிடத்தை இடிக்கும் முடிவு மாற்றப்பட்டது. உதகை அரசு மருத்துவமனை அருகே புதிதாக மாவட்ட காவல் துறை அலுவலகம் கட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பழைய கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற காவல்துறை முடிவு செய்தது. தற்போது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பாரம்பரிய கட்டிடமாக மாற்றும் பணியும் தொடங்கப்பட்டது. இதில், நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் வரலாறு குறித்த புகைப்படங்கள், பழமையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், நீலகிரியின் பழமையான புகைப்படங்கள், வன உயிரின புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாச்சாரம், இயற்கை சுற்றுச்சூழல் சம்பந்தமான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த அருங்காட்சியகம், விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என 2016-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்தார்.
ஆனால், அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகளாகியும், அருங்காட்சியகமாக மாற்றும் நடவடிக்கை கிடப்பில் உள்ளது. மேலும், இந்த காவல் நிலையமும் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் உதகைக்கு ஆய்வுக்காக அப்போதைய டிஜிபி சைலேந்திர பாபு வந்தார். அப்போது, காவல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் உயிர் பெற்றது.
உதகை பி-1 காவல் நிலையத்தின் வரலாற்றை தெரிந்துகொண்ட டிஜிபி, அந்த கட்டிடத்தை காவல் அருங்காட்சியமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.