
கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும் மாற்று நாளான இன்று போட்டி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் இரு மாற்றங்கள் இருந்தது. ஸ்ரேயஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக களமிறங்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டார். மேலும் மொகமது ஷமிக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்கினார்.