
ஈரோடு: ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச்சந்தை வளாகம், மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுவதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காய்கறிச்சந்தையை மீண்டும் ஆர்.கே.வி.சாலைக்கே இடமாற்றம் செய்து, வஉசி மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென நகரவாசிகள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறிச்சந்தையில் 200-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வந்தன. கரோனா பரவலின்போது, பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், காய்கறிச்சந்தை ஈரோடு பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. கரோனா பரவலின் வீரியம் குறைந்த நிலையில், பேருந்துகள் இயக்கம் தொடங்கியதால், காய்கறிச்சந்தைக்கு மாற்றிடம் தேவைப்பட்டது.
தற்காலிக கடைகள்: ஏற்கெனவே, காய்கறிச்சந்தை செயல்பட்டு வந்த இடத்தில், இருந்த பழைய கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, புதிய கடைகள் கட்டும் பணி தொடங்கியிருந்த நிலையில், ஈரோடு வஉசி மைதானத்திற்கு காய்கறிச்சந்தையை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வஉசி மைதானத்தில், ரூ.1கோடி மதிப்பீட்டில் தற்காலிக கடைகள் கட்டப்பட்டு, அங்கு காய்கறிச்சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது ஈரோடு காய்கறிச்சந்தையில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தையில் இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலையில் சில்லறை வியாபாரமும் நடந்து வருகிறது. ஈரோட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் நூறு டன்னுக்கு மேலாக காய்கறிகள் வரத்தாகி, விற்பனையாகி வருகிறது.
தேசிய தரச்சான்றிதழ்: ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் காய்கறிச் சந்தை மிகவும் சுத்தமாகவும், முறையான பராமரிப்புடனும் இருப்பதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது. ஈரோடு நகரில் சிறிது நேரம் மழை பெய்தாலே, காய்கறிச்சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வருவதில் தொடங்கி, காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் வரை பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், மழைக்காலங்களில் காய்கறிச்சந்தைக்கு வருவது குறைந்து விற்பனை சரிவால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறுவதைத் தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.29 கோடியில் புதிய கடைகள்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கரோனா காரணமாகவும், ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் புதிய கடைகள் கட்டும் பணிகள் காரணமாகவும் தற்காலிமாக வஉசி மைதானத்திற்கு காய்கறிச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. ரூ.1 கோடி மதிப்பீட்டில் தற்காலிக கடைகள் மற்றும் சாலை வசதி செய்து தரப்பட்டது. தற்போது ஆர்கேவி சாலையில் உள்ள நேதாஜி மார்க்கெட்டில், ரூ.29.85 கோடி மதிப்பீட்டில், 290 கடைகள் மற்றும் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துஉள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததும், காய்கறிச்சந்தை இடமாற்றம் செய்யப்படும் என்பதால், வஉசி மைதான காய்கறிச் சந்தையில் கூடுதல் வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. தற்போதைய மழையால் ஏற்படும் பாதிப்பை பார்வையிட்டுள்ள ஆணையர், அதனை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இடமாற்றம் அவசியம்: ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள வஉசி மைதானத்தில், கடந்த காலங்களில் அரசியல் கட்சி கூட்டங்கள், சர்க்கஸ், புகழ்பெற்ற ஈரோடு புத்தகத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்து வந்தன. நிகழ்ச்சிகள் இல்லாதபோது, மாணவர்கள் கிரிக்கெட் விளையாடவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் இந்த மைதானம் பயன்பட்டு வந்தது. கரோனாவைக் காரணம் காட்டி, இங்கு காய்கறிச்சந்தை வந்ததால், ஈரோடு புத்தகத்திருவிழா, சி.என்.கல்லூரி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்து வாசகர்கள் பங்கேற்கும் ஈரோடு புத்தகத்திருவிழாவை இடம் மாற்றியதால், வாசகர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, காய்கறிச்சந்தையை ஆர்.கே.வி.சாலையில் உள்ள நேதாஜி காய்கறிச்சந்தைக்கு மாற்றி விட்டு, மைதானத்தை எங்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த நகரவாசிகளின் கோரிக்கையாக உள்ளது. அதேநேரத்தில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆர்.கே.வி.சாலையில், மீண்டும் நேதாஜி காய்கறிச் சந்தை செயல்படுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும் மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. புதிய கடைகள் கட்டப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட கடைகளை மட்டும் இடமாற்றம் செய்து விட்டு, மைதானத்தின் ஒரு பகுதியில் மட்டும் இதர கடைகள் செயல்பட அனுமதிக்கலாம் என்ற கருத்தும் வியாபாரிகளிடம் உள்ளது. காய்கறிச்சந்தை விவகாரத்தில், காலம் தாழ்த்தாமல் ஈரோடு மாநகராட்சி முடிவு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.