
கொச்சி: கேரளாவில் மலையாளத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெஃப்காவின் கீழ், 21 திரைப்பட சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே திரைத்துறையில் பணியாற்ற முடியும். இதில் ஒன்று, கேரள திரைப்பட கார் ஓட்டுநர்கள் சங்கம். இதில் 560 ஓட்டுநர்கள் உறுப்பினராக உள்ளனர். அனைவரும் ஆண்கள். இதில் 15 பேர் கேரவன் ஓட்டுகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சங்கத்தில் 5 பெண் ஓட்டுநர்கள் முதற்கட்டமாக நியமிக்கப்பட இருக்கின்றனர். திரையுலகப் பெண்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மலையாள திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான கூட்டுறவுச் சங்கத்தில் அவர்கள் சொந்த வாகனம் வாங்கக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப்படும். கேரவன் உள்ளிட்ட பெரிய வாகனங்களை ஓட்டுவதற்குப் பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது.
இந்தச் சங்கத்தின் ஆண்டு சந்தா ரூ.7,900. பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உறுப்பினர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. மூன்று மாதங்களில் அவர்கள் பணியில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. திரைத்துறையில் பெண் ஓட்டுநர்கள் இணைவது இதுதான் முதன் முறை என்று கூறப்படுகிறது.