மதுரை: மதுரை மாநகராட்சியில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த பாதிப்பை தடுக்க நேற்று மேயர் இந்திராணி தலைமையில் அதிகாரிகள் அவசர ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு பாதிப்பு அதிரிக்கும் நிலையில், மதுரை மாநகரை பொறுத்தவரை செப்டம்பர் மாதம் இதுவரை 7 நபர்களுக்கு இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய் பரவல் இல்லை என்ற நிலை இருந்தபோதிலும் நோய்ப் பாதிப்பை கட்டுக்குள் வைப்பதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமை வகித்தார். ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மண்டல வாரியாக சிறப்புக்குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேயர் இந்திராணி பேசுகையில், ‘‘குடியிருப்பு பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்க, தேவையற்ற டயர்களை அப்புறப்படுத்துதல், கட்டிடப்பணி நடக்கும் இடத்தில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுத்தல், பழைய பொருட்கள் சுழற்சி செய்யும் இடங்களை ஆய்வு செய்தல், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் கொசுப்புழு உற்பத்தியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு மற்றும் அருகாமையில் உள்ள இடங்களில் கொசுப்புழு தேங்காதவண்ணம் தேவையற்ற பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள் அப்புறப்படுத்தவும் மற்றும் குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
காய்ச்சல் வந்தால் தாமாக மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக அருகாமையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். மேலும், வீடு தேடி வரும் மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு (DBC Workers) தகுந்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் துணை மேயர் தி.நாகராஜன், நகர்நல அலுவலர் வினோத்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, கல்வி அலுவலர் நாகேந்திரன், மண்டல பூச்சியியல் வல்லுனர் விக்டர் மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.