மதுரை: வெளிநாட்டின் பிரம்மாண்டத்தையும், சுற்றுலாத் தலங்களையும் கண்டு வியக்கும் நம்ம ஊர் மக்கள், நமக்கு அருகில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களையும், எண்ணற்ற ஆச்சரியங்கள் நிறைந்த புராதன இடங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
சுற்றுலாத் துறையும், உள்ளூர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகளில் இதுவரை பெரிதாக கவனம் செலுத்தவில்லை. பன்முகத் தன்மை கொண்ட தமிழ்நாட்டுக்கு என்றுமே ஒரு தனித்த அடையாளம் உண்டு. பழமையான கலாச்சாரங்கள், இயற்கை எழில் கொஞ்சும் குளிர் பிரதேசங்கள், கடற்கரைகள், காலத்தால் அழியாத கண்கவர் கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற கோயில்கள் மாநிலம் முழுவதும் இருக்கின்றன.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலேயே சுற்றுலாத் துறையின் முழு கவனமும் இருந்தது. அதனால், ‘கரோனா’வுக்கு பிறகு தமிழக சுற்றுலாத் துறை தள்ளாட்டம் காணத் தொடங்கியது. சுற்றுலாத் தொழில்கள் நலிவடைந்ததால் அதைச் சார்ந்து வேலை வாய்ப்புப் பெற்ற தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். தற்போது தான் தமிழக சுற்றுலாத் துறை கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியுள்ளது.
சுற்றுலா என்பது இன்று உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அந்த ளவுக்கு உலக நாடுகள், சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள், ஐரோப்பாவின் பல நாடுகளின் பொருளாதாரமும், வர்த்தகமும் சுற்றுலாவையே பெரிதும் நம்பியுள்ளன. வேலை வாய்ப்பை உருவாக்கவும், அந்நியச் செலாவணியை ஈட்டவும் சுற்றுலா தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது தமிழக சுற்றுலாத் துறையும் உள்ளூர் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா, ஆடி மாத ஆன்மிகச் சுற்றுலா போன்றவற்றை தொடங்கி இருக்கிறது. இந்த அடிப்படையில் மதுரையில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்டவற்றை இணைத்து ஆடிமாத ஆன்மிக சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மதுரை மாவட்ட சுற்றுலாத் துறை தற்போது மதுரை – கொடைக்கானல், மதுரை – ராமேசுவரம் போன்ற இடங்களுக்கு சிறப்பு ஏ.சி. பஸ்கள் மூலம் ஒரு நாள் சுற்றுலாத் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கரோனாவுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளையும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மதுரையில் ஒருநாள் சுற்றுலா திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ‘மதுரை சிட்டி சுற்றுலா’வில் மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், காந்தி அருங்காட்சியகம் போன்றவை இடம் பெற்றுள்ளன.
இந்தச் சுற்றுலாவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல், மதுரை – கொடைக்கானல், மதுரை – ராமேசுவரம் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏசி வசதி கொண்ட அரசு பஸ்களில் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் இந்த சுற்றுலாவுக்கு நேரம் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விவரமும், வசதிகளும், அரசு ஒப்புதல் வழங்கியதும் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.