இம்பால்: மணிப்பூரில் மீரா பைபி (Meira Paibi) என்கிற மைதேயி பெண்கள் அமைப்பு, ஐந்து உள்ளூர் அமைப்புகளும் இணைந்து நடத்தும் பந்த் காரணமாக இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதம் தாங்கியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடுவிக்கக்கோரி இந்த அமைப்புகள் நள்ளிரவு முதல் 48 மணிநேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த பந்த் காரணமாக செவ்வாய்க்கிழமை சந்தைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, சில வாகனங்களே சாலைகளில் ஓடின. இதனிடையே மணிப்பூர் மேல்நிலை கல்வி வாரியம் செவ்வாய் மற்றும் புதன் கிழமை நடத்த திட்டமிட்டிருந்த 10 ஆம் வகுப்புக்கான அனைத்து துணைத்தேர்வுகளும் பந்த் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.