Health

மசாலாக்களின் மறுபக்கம்… – Dinakaran

மசாலாக்களின் மறுபக்கம்… – Dinakaran


நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

மருந்தாகும் கிராம்பு

இந்தோனேஷியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கிராம்பு, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் ஷிஜியம் அரோமேடிகம். சுமார் 26 முதல் 40 அடி வரையில் வளரும் கிராம்பு மரம் ஆறு வருடங்களுக்குப்பிறகு பூக்களைக் கொடுக்கும். இந்தப் பூக்கள் உலர வைக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு, கிராம்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

சீனாவின் ஹான் பேரரசு காலத்தில், அரசரின் புகழ்பாட பணியமர்த்தப்படும் பணியாட்கள், வாயில் கிராம்பை வைத்துக்கொண்டுதான் பெயரை உச்சரிக்க வேண்டுமாம். அப்போதுதான் உச்சரிப்பவரின் வாய் மணப்பதுடன், அரசரின் பெயரும் மணக்குமாம். கிராம்புவின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், ஒரு கிராம்பு மரக்கன்று நடவேண்டும் என்பது மொலுக்கா தீவிலுள்ள மக்களின் பழக்கம். ஆனாலும் உற்பத்தி செய்த அந்த கிராம்பினை, இவர்கள் நேரடியாக உணவுப் பொருளாகப் பயன்படுத்தாமல், புத்துணர்வை அளிக்கும் தேநீர் தயாரிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள்.

பாரம்பரிய சீன மருத்துவத்தில் கிராம்புவை முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். கிராம்புவில் உள்ள phytochemicals ஆக, Eugenyl acetate, Eugenol, beta caryophyllene, alpha humulen போன்றவை அறியப்படுகின்றன. கிராம்புவிற்கான தனிப்பட்ட மணத்தையும், சுவையையும் கொடுப்பது eugenol (89%) மற்றும் eugeol acetate (15%) என்ற இரண்டு முக்கியப் பொருட்கள். கிராம்பு மசாலாவாக மட்டும் பயன்படாமல், மிகச் சிறந்த மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

வயிறு உப்புசம், செரிமானக் கோளாறு, வாய் துர்நாற்றம் போன்றவற்றைப் போக்குகிறது. மேலும் கிராம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. கிராம்புவில் இருக்கும் முக்கியப் பொருளான யூஜினால், அளவுடன் பயன்படுத்தப்படும்போது, சிறப்பான மருத்துவ குணத்தைக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, பல் வலிக்கு, பொடித்த கிராம்புவை வைத்து அழுத்தினால், பல் சொத்தை அல்லது வலி ஏற்பட்ட இடத்தில் இருக்கும் கெட்டநீர் வடிந்து விடுகிறது. மேலும் அந்த இடத்தை உணர்ச்சியற்றதாக மாற்றுவதால், வலியும் குறைகிறது.

கிராம்பில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கிராம்பு எண்ணெய், வாசனை திரவியங்கள், வாய் கொப்பளிக்கப் பயன்படும் திரவம், களிம்புகள், சோப்புகள் தயாரிக்கப் பயன்படுவது மட்டுமல்லாமல், உடலியங்கியல் செல் பரிசோதனைகளின்போது, சுத்தப்படுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது. இவையனைத்தையும் கடந்து, கிராம்புவின் குறிப்பிடத்தக்க பயன்பாடு என்னவெனில், இந்தோனேசியாவில் தயாரிக்கப்படும் பிரத்யேகமான வடிதாள் இல்லாத முசநவநம என்னும் சிகரெட் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. சுமார் 90% புகைப்பிரியர்களால் விரும்பப்படும் உலகப் புகழ்பெற்ற இந்த சிகரெட்டின் மூலப்பொருட்கள் புகையிலை மற்றும் கிராம்பு. கிராம்பு எரியும்போது வெளிப்படும் மென்மையான வெடிக்கும் சத்தம் மசநவநம என்று ஒலிக்கும் நிலையில், அதுவே பெயராகவும் நிலைத்துள்ளது.

கிராம்பு மசாலாகவும், எண்ணெய்யாகவும் பல்வேறு பயன்களைக் கொடுத்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவில் பயன்படுத்துவதே நன்மையளிக்கும். ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கிராம்புகள் பயன்படுத்தலாம். வெறும் வாயில் மென்று திண்ணவேண்டும் என்றால், ஒன்று அல்லது 2 போதும். பொடியாகப் பயன்படுத்தும் நிலையில் அரை தேக்கரண்டி போதுமானது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவென்பது, ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 2.5 மி.கிராம் மட்டுமே. அதிக அளவில், தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும்போது, சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

செல் சுவரில் இருக்கும் பாஸ்போலிப்பிட்ஸ் உடன் வினைபுரிந்து, அவற்றின் புரதங்களை சிதைத்து, சுவரின் ஊடுருவும் தன்மையைக் குறைத்துவிடுகிறது. விலங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த யூஜினால் என்னும் பொருள், விலங்குகளின் இனப்பெருக்க மண்டல செயல்பாடுகளை குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இயற்கையில், மென்மையான தோல் உடையவர்கள் தொடர்ச்சியாகக் கிராம்பு எண்ணெய் உபயோகித்தால், எரிச்சல் ஏற்படுவதுடன், தோல் கருகும் அபாயமும் உண்டு.

உயர் ரத்தஅழுத்தம் மற்றும் நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளுடன் விரைவாக வினைபுரிவதால், தொடர்ச்சியாக கிராம்பு உபயோகிக்கும்போது, ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்களால் எச்சரிக்கப்படுகிறது. நீடித்த பக்கவிளைவுகளாக, கல்லீரல் பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவையும் ஏற்படலாம். கிராம்பு மற்றும் மிளகு உள்ளிட்ட காரத்தன்மை அதிகமுள்ள மசாலா தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் சிலர் சுவாச ஒவ்வாமை, மேல் மற்றும் கீழ் சுவாசக்குழாய் எரிச்சல், நுரையீரல் பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்னும் ஆய்வு முடிவுகள், கிராம்பு போன்ற பொருட்களின் வீரியத்தைத் தெரியப்படுத்துகின்றன.Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *